tamilnadu

img

இந்நாள் ஜுலை 02 இதற்கு முன்னால்

1962 - வருவாய் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் வால்மார்ட்-டின் முதல் கடை திறக்கப்பட்டது. ஜே.சி.பென்னி என்ற சங்கிலித்தொடர் சில்லரை விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்கொண்ட 27 வயது இளைஞர் சாம் வால்ட்டன், 1945இல் பென் பிராங்க்ளின் தொடர் கடைகளின் கிளை ஒன்றை வாங்கி நடத்தத் தொடங்கினார். மிகக்குறைந்த விலைக்கு மிக அதிகப் பொருட்களை விற்பனைசெய்யும் முயற்சியில், மற்ற நிறுவனங்களைவிடக் குறைந்த விலைக்குப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான வழிகளையும் கண்டறிந்தார். வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்வதே நோக்கம் என்று அறிவித்து, முதலாண்டிலேயே 1.05 லட்சம் டாலர்கள்(தற்போது ரூ.952 கோடி!) வருவாய் ஈட்டியதுடன், ஐந்தாண்டுகள் முடிவில் ‘வால்ட்டனின் ஐந்தும் பத்தும்’ என்ற கடையைத் திறந்த அவர்தான் 1962இல் வால்மார்ட்டை உருவாக்கினார். ஐந்தாண்டுகள் முடிவில் 24 கிளைகளைக் கொண்டிருந்த வால்மார்ட், 25ஆம் ஆண்டு இறுதியில் 1198 கிளைகளைக் கொண்டிருந்தது. தற்போது, மொத்தமுள்ள 11,368 வால்மார்ட் கடைகளில், 6,006 கடைகள் 58 வெளிநாடுகளில் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் வேறு பெயர்களில் இயங்குகின்றன (மெக்சிகோவில் வால்மெக்ஸ், இங்கிலாந்தில் ஆஸ்டா, ஜப்பானில் செய்யூ, இந்தியாவில் பெஸ்ட் ப்ரைஸ்!). 1969இல் கார்ப்பரேட் நிறுவனமாக்கப்பட்ட வால்மார்ட், 2002இல் ஃபார்ச்சூன் 500இல் இடம்பிடித்தது. தற்போது (2018-19), 514.4 பில்லியன் டாலர்(ரூ.35.50 லட்சம் கோடி!) வருவாயுடன் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகவும், 22 லட்சம் ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய தனியார் வேலையளிப்பவராகவுமுள்ள வால்மார்ட், உலகின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் நெட்வொர்க்கையும்கொண்டு, அதன்மூலம் அனைத்துக் கடைகளையும் இணைத்துள்ளது. வால்மார்ட் கடைகளின் மொத்தப் பரப்பளவு, மன்ஹாட்டன் நகரைப்போல ஒன்றரை மடங்கு! இந்நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை இன்றும் கொண்டிருக்கும் வால்ட்டன் குடும்பத்தினரே, அமெரிக்காவின் முதல் 10 செல்வந்தர்கள் பட்டியலில் 4 இடங்களை ஆக்கிரமிக்கின்றனர்! கடுமையான தொழிற்சங்க எதிர்ப்புக்கொள்கைகளைக் கொண்டிருக்கிற வால்மார்ட் மீது குறைவான ஊதியம், மோசமான பணிநிலைகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உலகம் முழுவதும் உள்ளன.