tamilnadu

img

இந்நாள் நவ. 30 இதற்கு முன்னால்

1782 - அமெரிக்க விடுதலைப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த, பாரிஸ் ஒப்பந்தத்தின் வரைவு உருவாக்கப்பட்டது. இதுவே, முதல் ஆங்கிலேயப் பேரரசின் முடிவைத் தொடக்கிவைத்து, (புதிய நிலப்பரப்புகளின்) கண்டுபிடிப்புக் காலம் என்றழைக்கப்படுகிற 15,16ஆம் நூற்றாண்டுகளில், போர்ச்சுகலும், ஸ்பெயினும் கடற்பயணங்கள்மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆட்சியை உருவாக்கின. கடல்கடந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து இந்நாடுகளில் குவிந்த செல்வமே, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து(டச்சுக்காரர்கள்) ஆகியவற்றையும் இதில் இறக்கியது. 16ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், புதிய நிலப்பரப்புகளைக் கண்டறிய மட்டுமின்றி, செல்வங்களுடன் திரும்பும் பிற நாடுகளின் கப்பல்களைக் கொள்ளையிடவும் இங்கிலாந்து அரசு அனுமதியளித்தது! தொடக்கத்தில், கடல் கடந்த பகுதிகளை உரிமை கோரினாலும், குடியேற்றங்களை உருவாக்கத் தவறிய இங்கிலாந்து, 1700களின் தொடக்கத்தில் வடஅமெரிக்காவின் முக்கியச் சக்தியாக மாறியது.

1757இன் ப்ளாசிப் போருக்குப்பின் முகலாயர்களை ஓரங்கட்டி, இந்தியத் துணைக் கண்டத்திலும் காலூன்றியது. 1583இலிருந்து, அமெரிக்க விடுதலை ஒப்பந்தம் கையெழுத்தான 1783 வரையானது முதல் ஆங்கிலேயப் பேரரசு என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கா கைவிட்டுப்போனதும், ஆசியா, ஆஃப்ரிக்கா, பசிஃபிக் பகுதிகள் ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தத்தொடங்கிய இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில், 1783-1815 காலத்தில் இருந்தவை இரண்டாம் ஆங்கிலேயப் பேரரசு என்று குறிப்பிடப்படுகின்றன. 1815-1914 காலம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டு என்று குறிப்பிடப்படுகிறது. 1900களின் தொடக்கத்தில் புவியின் மொத்த நிலப்பரப்பில் 24 சதவீதத்துக்கு, உலகம் முழுவதும் பரவியிருந்த இங்கிலாந்துப் பேரரசின் ஏதாவதொரு பகுதி பகலாக இருந்ததால், சூரியன் மறையாத பேரரசு என்று பெருமிதப்பட்டுக்கொண்டது. உலக மக்கள்தொகையில் 23 சதவீதத்தை தங்களது ஆளுகையின்கீழ் கொண்டு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பேரரசாகவும், உலகின் முதற்பெரும் சக்தியாகவும் இது விளங்கியது. 1783இல் அமெரிக்காவுக்குப்பின், 1919இல் விடுதலைப்பெற்ற ஆஃப்கானிஸ்தான் தொடங்கி 63 நாடுகள் இங்கிலாந்திடமிருந்து விடுதலைப்பெற்றிருக்கின்றன. 1997இல் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததுடன் இங்கிலாந்துப் பேரரசு முழுமையாக முடிவுக்கு வந்தது. 1995இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் இங்கிலாந்திடமிருந்து விடுதலைப்பெறுவதை 73.6 சதவீத பெர்முடா மக்கள் ஏற்காததால், இங்கிலாந்தின் ஆளுகையின்கீழேயே பெர்முடா மட்டும் இன்றுமிருக்கிறது. கிரேட் பிரிட்டன் ஆகக் காரணமான வடஅயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவையும் அவ்வாறே மக்கள் விருப்பத்
தின்பேரில் இங்கிலாந்தின் பகுதிகளாகத் தொடர்கின்றன.

- அறிவுக்கடல்