tamilnadu

img

என் வாழ்க்கை சாதனங்களை நீ பறித்துக் கொள்ளும் போது...

இந்தியாவின் வேளாண் தொழில் ஒவ்வொரு மாநிலத்திலும் நீர் வளம், நில வளம், கட்டமைப்பு வசதிகள் காரணமாக வேறுபட்டாலும், வேளாண் தொழிலானது, மழையால் ஏற்படுகிற வெள்ளம் வறட்சி போன்ற காரணிகளால் நிரந்தர நிலையான வருமானத்தைத் தரும் தொழிலாக இன்று வரை அமையவில்லை. இன்றளவும் 65‌ விழுக்காடு மக்கள் ஊர்ப் புறங்களில் தான் வாழ்கிறார்கள்.நிலம் ஒரு பொருளாதார பாதுகாப்புக் காரணியாக இந்தியாவில் இன்றும் உள்ளது. சான்றாக 2019 கோவிட் கொடிய நோயின் தாக்குதல் பெருகவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 3 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டது.அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தது ஊர்ப்புறங்களே. பல படித்த இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரில் ‌உள்ள ஒரு ஏக்கர், அதற்கும் குறைவான நிலங்களில் பயிர் செய்யச் சென்று விட்டார்கள். வேறு வாழ்க்கை இல்லையே!]

இப்படிப்பட்ட நிலையில் அவசர அவசரமாக வேளாண் தொடர்பான சட்டங்களை  ஒன்றிய அரசு கொண்டு வருவதன் நோக்கம் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகிறவர்களுக்குப் புரிந்துவிட்டது.

மோடி வராதது ஏன்?
நாடாளுமன்றமும், நாடாளுமன்ற மேலவையும் நடைபெற்று வரும் சூழலில் நாட்டின் பிரதமர் இந்த இரு அவைகளுக்கும் வந்து இந்தச் சட்டத்தைப் பற்றி விளக்கம் அளித்து இருக்கலாமே?கணினி பதிவில் அரசு நடைமுறைப்படுத்தும் கொள்முதல் திட்டம் தொடரும் என்கிறார். சட்டத்தில் இல்லையே!கோவிட் பயம் இருந்தால் முழு முகமூடி அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் மோடிஎதிர்க்கட்சிகளின் சந்தேகங்களைப் போக்கியிருக்கலாமே!உயர்பணத்தாள்கள் மதிப்பு ‌நீக்க நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, மக்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்நடவடிக்கை பயன் தரவில்லை என்றால் தூக்கு மாட்டிக்கொள்வேன் என்றாரே பிரதமர்.  என்ன நடந்தது?   ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஏழைகள்தானே தற்கொலை செய்து கொண்டனர்.

வேளாண் நிலங்கள்...
2010-11 வேளாண் கணக்கெடுப்பின்படி  (Agricultural Census 2010-11) குறு விவசாயிகளிடம் தலா 1.25 முதல் ‌2.5 ஏக்கரும்,  சிறிய விவசாயிகளிடம் 2.5 முதல் 5 ஏக்கரும், நடுத்தர விவசாயிகளிடம் 10 ஏக்கர் முதல் 25 ஏக்கரும் உள்ளன. அகில இந்திய அளவில் 95 விழுக்காடு அளவு நிலங்கள் சிறு,குறு , நடுத்தர விவசாயிகளிடம் தான் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த மூன்று பிரிவினரிடம் 98 விழுக்காடு நிலங்கள் உள்ளன.இந்தப் பிரிவினர் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை, குறிப்பாக அரிசி, கோதுமை, கரும்பு முதலிய பொருட்கள் கொள்முதல் விலையை உறுதி செய்து அரசே வாங்குவதால் தான் இன்றும் பல பாதிப்புகளுக்கிடையில் வேளாண் உற்பத்தி தொடர்கிறது.இப்போது கொண்டு வந்துள்ள சட்டம் விவசாயிகளின் பொருட்களுக்குச் சந்தையில் அதிக விலையைப் பெற்றுத் தரும் எனக் கூறி முதலாளிகள் கொள்ளை அடிக்க வழிவகுத்து விடும் என்பதே பலரின் கவலை. அச்சம்.சான்றாக, தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து கரும்பைப் பெற்ற பல தனியார் சர்க்கரை ஆலைகள் கோடிக் கணக்கான ரூபாயை அவர்களுக்கு உரிய விலைத் தொகையைத் தராமல் உள்ளார்களே!இதில் வேடிக்கை என்னவென்றால் 2013 ஆம் ஆண்டு நிலம் ‌கையகப்படுத்தும் சட்டத்தை மன்மோகன் சிங் கொண்டு வந்த போது 15 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.60 நாடாளு மன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். அப்போது ‌பாஜக உறுப்பினர்கள் இச்சட்டத்தை எதிர்த்தார்களே?இன்றோ முதலாளிகள் நலனைக் காக்க மட்டுமே மோடி அரசு முற்படுகிறது.

அம்பானி சொத்துக்குவிப்பு
2012 இல் அதிதி காந்தி, மைக்கேல் வால்டன் (EPW- October 6,2012) ஆகியோர் இணைந்து எழுதிய கட்டுரையில் 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டு பெரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 2012 இல் பெரும் முதலாளிகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. இந்தப் பெரு முதலாளிகளின் பட்டியலில் முகேஷ் அம்பானி 9 லட்சம் கோடியைத்தன் கைவசத்தில்‌  வைத்திருந்தார்.2020 ஆம் ஆண்டில்  இன்னும் பல லட்சம் கோடிகளைப் பெற்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்திற்கு வந்துவிட்டார். பிரதமர் மோடியின் நண்பர் அம்பானி வளர்ச்சியைக் கண்டு தான் இந்தியா ‌வளர்ந்து விட்டது என்று ஓயாமல் ‌அகில இந்திய வானொலி நாள்தோறும் காலையில்அலறுகிறது.மோடியின் மனதின் குரல் அல்லவா ஊடகங்கள்? நெருக்கடி நிலை காலத்தில் கோயங்கா செய்த ஜனநாயக பாதுகாப்புப் பணியை, இந்து ஆங்கில நாளிதழ் இன்று  கடமை உணர்வோடு ஆற்றுவது  நமக்கு ஆறுதலாக உள்ளது.

முதலாளித்துவத்தை எரி
ஞாயிற்றுக்கிழமை (20 செப்டம்பர்) ஜெர்மனியில் மக்கள்அரசின் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக அணிவகுத்தனர்.   பெருகி வரும் ஏற்றத் தாழ்விற்கு எதிராகக் களம் கண்டனர். 

நிலக்கரியை எரிக்காதே 
முதலாளித்துவத்தை எரி ’  என முழக்கம் இட்டனர்.
 ( Don’t burn Coal - Burn Capitalism)     
‘பணக்காரர்கள் குவித்து வைத்து இருக்கும்
சொத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்கு’ என்றும் முழக்கம் இட்டனர்.
கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவம் செய்யும் கொடுமைகளை விளக்கும் போது  கவிஞர்.பியரின் கவிதை வரிகளை எடுத்துச் சுட்டுகிறார்.
என்ன அந்தக் கவிதை வரிகள்?
“என் வாழ்க்கை சாதனங்களை நீ பறித்துக் 
கொள்ளும் போது என் உயிரையே 
பறித்தவனாகிறாய். “ (மூலதனம் முதல் தொகுதி - கார்ல் மார்க்ஸ்- மொழி ஆக்கம்
க.ரா.ஜமதக்னி பக்கம் 737-738)-
(You take my life when you do take the means I live)

இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் வந்த கருத்துப் படம் இதைத்தானே எதிரொலிக்கிறது,மார்க்ஸ் குறிப்பிட்ட கவிதை வரிகளுக்கு ஓவியர் நன்றாகச்சிந்தித்து‌ அளித்த விளக்கமாக உள்ளது. நாட்டிற்கு தேவையான சிந்தனை!