tamilnadu

img

கஜா புயல் பாதிப்புக்கு வரவேண்டிய இன்சூரன்ஸ் தொகை என்னாயிற்று? குமுறும் விவசாயிகள்

கஜா புயலின் போது அறிவிக்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸ் மற்றும் சிறு,குறு நிறுவனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். பிரதமர் யோஜனா பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த காலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஓரளவு நம்பிக்கையை அளித்து வந்துள்ளது.குறிப்பாக இயற்கை சீற்றம் ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கும் போது அந்த பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நிவாரணம் அளிக்கப்பட்டு வந்தது.

சில சமயங்களில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியின் காரணமாக சாகுபடியில் மகசூல் பலன் கிடைக்கவில்லை என்றால் பயிர் காப்பீடு தான் அதை ஈடுசெய்யும்.மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பின்னால் விவசாயம் கேள்விக்குறி ஆகியுள்ளது.விவசாயிகளின் வாழ்வாதரமும் படிப்படியாக பலவீனம் அடைந்து வருகிறது.  விவசாயத்திற்கான நிதி ஒதுக்குவதிலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்குவதிலும் பெரும் சிரமங்கள் உள்ளது. அதேபோல் பயிர் இழப்பீடு குறித்த பலன்களை விவசாயிகள் பெறுவதிலும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.பயிர் இழப்பீட்டுக்கான திட்ட பணிகள் குறித்த ஆய்வுகளை முடித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும் குழப்பங்களும்,குளறுபடிகளும் உள்ளது என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.அதேபோல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறு,குறு தொழில் நடத்துபவர்கள் சார்பில் டெல்டா மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்கனவே தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர்.அதற்கு இதுவரை எந்த பலனும் இல்லை. 

டெல்டா மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக இருப்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும் சிறு, குறு நிறுவனங்கள் நடத்தி வருகின்ற உரிமையாளர்களையும் பாதுகாப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்பது தான் அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று நெருக்கடியில் மேலும் பல சிரமங்களை இவர்கள் சந்தித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதற்கு பிறகு டெல்டா மாவட்டங்களான தஞ்சை,நாகை,திருவாரூருக்கு ஆறு முறை வருகை தந்துள்ளார். அப்போதெல்லாம் வளர்ச்சி திட்ட பணிகள் என்ற முறையில் அவருடைய உறுதிமொழிகள் வெறும் அறிவிப்புகளாகவே இருந்துள்ளன. எதையும் நிறைவேற்றியபாடில்லை. 

தற்போது 28-8-2020-ல் டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவசாயிகளும், சிறு, குறு நிறுவன உரிமையாளர்களும் மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இப்போதாவது,அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்ற கேள்விக் கணைகளுடன் விவசாயிகளும்,சிறு,குறு நிறுவன உரிமையாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.குறிப்பாக 2019-20ஆம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும், குளறுபடிகளையும் சரி செய்ய வேண்டும் என்பதும்,கஜா புயல்பாதிப்பின் போது அறிவிக்கப்பட்ட  சிறு,குறு நிறுவனங்களுக்கான இழப்பீட்டு தொகையையும் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்பதும் இவர்களுடைய கோரிக்கையாக உள்ளது.சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் இது சாத்தியமாகுமா அல்லது இந்த துயரங்கள் தேர்தல் வரையிலும் அப்படியே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.