tamilnadu

img

விருதுநகர் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி.... ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

விருதுநகர்: 
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மெட்டுக்குண்டு ஊராட்சி. இங்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மார்ச் 23 வரை தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஆனால், தற்போது வரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கூலியாக நாள் ஒன்றுக்கு வெறும் 85 மட்டுமே வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், 30 தொழிலாளர்களின் வங்கி கணக்கில் திடீரென ரூ.21,700 ஏற்றப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஊராட்சி அலுவலகத்தில் இதுபற்றி விளக்கம் கேட்டுள்ளனர். சாலைப் பணி நடைபெற்றதாகவும், அதில் வேறு நபர்களை பயன்படுத்தியுள்ளதாகவும், அப்பணியில் இங்கு பதிவு பெற்ற தொழிலாளியின் வங்கி கணக்கில் பணம் ஏற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஏற்கனவே, செய்த வேலைக்கு கூலி வழங்க வேண்டும். 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும். முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சமதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.