நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெங்காய விலை குறித்து கேள்வி எழுப்பிய போது நான் வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று பதில் சொல்லிய தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வெங்காயம் குறித்து பேசாத ஊடகங்களும் இல்லை. வெங்காயம் பற்றிய செய்தி வராத நாளேடுகளும் இல்லை. வெங்காயம் குறித்து வராத மீம்ஸ்களும் இல்லை.
பெரம்பலூர் மாவட்டம்
நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே சின்ன வெங்காயம் அதிகமாக பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம் தான் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அடுத்தபடியாக திண்டுக்கல் திருச்சி, திருப்பூர், கோவை, நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களிலும் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரிட தகுந்த மண் வளமும், சீதோஷ்ண நிலையும் நிலவுவதால் ஆண்டு தோறும் 23 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெங்காயம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக்கலைத் துறை மூலம் வெங்காய உற்பத்திக்கான விதை கண்டுபிடிக்கப்பட்டாலும் அந்த விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் சேமித்து வைக்க முடியாத நிலையில் உள்ளதால் இந்த முறையை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்றுவதில்லை. மாறாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திலிருந்தே தரமான விதை வெங்காயத்தை எடுத்து வைத்துக் கொள்வார்கள். அதை வைத்து தான் சாகுபடியில் ஈடுபடுகிறார்கள்.
வெங்காயத்தின் சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. சில சமயங்களில் உற்பத்திச் செலவுக்கு கூட வெங்காயம் விற்காது. சில நேரங்களில் வெங்காயம் தாள் ஆய்கிற கூலிக்கு கூட விலை கிடைக்காததால் வயல் காட்டிலேயே வெங்காயத்தை பிடுங்காமல் விட்டு விடுவதும் உண்டு.
சேமிக்கும் நுட்பம்
லாபகரமான விலை கிடைக்காத காலங்களில் தாளோடு வெங்காயம் பிடுங்கப்பட்டு வயலில் முட்டு கட்டி தாள் வதங்கியவுடன் பட்டறை கட்டி போர் வைத்து வெங்காயத்தை மூன்று நான்கு மாதங்கள் சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை விவசாயிகள் கையாண்டு வருகின்றனர். வெயில் காலங்களில் காற்றோட்டம் செல்லும் வகையிலும் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே செல்லாத வகையிலும் கொண்ட வெங்காயப் பட்டறை அமைக்கும் தொழில்நுட்பமானது தற்போது நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெங்காயம் பதப்படுத்தி வைக்கும் குளிர்பதன கிடங்கை விட மிகச் சிறந்த தொழில்நுட்பம் என ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது. தற்போது கூட வெங்காயத்தின் விலை ரூபாய் 200க்கும் அதிகமாக வெளி மார்க்கெட்டில் விற்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 80 ரூபாய் மட்டுமே கிடைப்பது தான் வேதனையிலும் வேதனை. தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் முழுவதும் திருகல் நோயாலும், வேர் அழுகல் நோயாலும் பாதிக்கப்பட்டு மகசூல் முழுவதுமாக அழிந்து விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகி செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
சின்ன வெங்காயம் அதிகம் விளையும் காலங்களில் விற்பனைக்காக திருச்சி, திண்டுக்கல் விழுப்புரம், சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் அங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, காரைக்குடி, பகுதிகளுக்கு செல்கிறது. தற்போது சென்னைக்கு செல்வது மிகவும் குறைந்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கும் செல்லும் வெங்காய ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
விளைச்சல் பாதிப்பு
இதேபோல் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வருடம் கர்நாடகா, மகாராஷ்டிராவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை தொடர் மழையாக பெய்த காரணத்தினால் பல்லாரி வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெரிய வெங்காயம்
மகாராஷ்டிராவிலிருந்து நாசிக், வாசல்காவ், புனே, அகமத்நகர், பிம்பில்காவ், துலே, உம்ரானா, மன்மாட, ஏவ்லா உள்ளிட்ட சந்தைகள் மூலம் அதிக அளவு வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மொத்த சந்தைகளில் தற்போது 30 சதவீதம் வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைமை போய் எகிப்து போன்ற சில நாடுகளிலிருந்து நமது தேவைக்காக மத்திய அரசால் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை துறைமுகத்திற்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்தாலும் இதில் தமிழகத்துக்கு 500 மெட்ரிக் டன் வெங்காயம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏக காலத்தில் சின்ன வெங்காயமும் பெரிய வெங்காயமும், தொடர் மழையின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வெளிச்சந்தைக்கு வெங்காயம் வருவது குறைந்த காரணத்தால் தான் இந்த அளவு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
2 லட்சம் டன் 80 ஆயிரம் டன்னானது
மக்களின் தேவைகளுக்காக ஆண்டு தோறும் சராசரியாக 2 லட்சம் டன் பெரிய வெங்காயம் தமிழக சந்தைகளுக்கு வருகை தரும். ஆனால் தற்போது 80 ஆயிரம் டன்னாக பெரிய வெங்காயம் வரத்து குறைந்து போய் உள்ளது. அதே போல் சின்ன வெங்காயம் 10 லட்சம் டன் வெளிச்சந்தைக்கு விற்பனைக்கு வரும். தற்போது 2 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. வெங்காயத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் வெங்காயத்தை நறுக்கினால் தான் கண்ணீர் வரும். ஆனால் இப்ப இருக்கிற நிலைமையில வெங்காயத்தை நினைக்கும் போதே கண்ணுல கண்ணீர் வந்து விடும் போல் இருக்கிறது. வெங்காய விலை ஏற்றம் இல்லத்தரசிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வெங்காயத்தை வாங்க முடியாமல் தவிக்கின்றனர் மக்கள்? என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசுகள்?. இந்த தட்டுப்பாட்டை இடைத்தரகர்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடைவதை தடுத்தி நிறுத்த அரசே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து நியாயமான விலையில் ரேசன் மூலம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமா?