tamilnadu

img

பாஜகவில் இருக்கிறோம் என்று சொல்லவே அசிங்கமா இருக்கு! - மாவட்ட தலைவரை எதிர்த்து போராட்டம்

பாஜகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பாஜகவில் இருக்கிறோம் என்று சொல்லவே அசிங்கமாக உள்ளது என கூறி விழுப்புரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதன் கடந்தாண்டு பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசியது சர்சைக்குள்ளானது. இதனால் கடந்த ஆண்டு மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலையையே விழுப்புரம் மாவட்டம் பாஜகவை வடக்கு மாவட்டம் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரித்து மீண்டும் கலிவரதனை தெற்கு மாவட்ட தலைவராக நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

பாஜக தெற்கு மாவட்ட தலைவராக அவர் நியமிக்கப்பட்டதால் கட்சி நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சிக்குள் சலசலப்பு இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலிவரதன் மாவட்ட ஐடி விங் பிரிவு தலைவருடன் பேசும்போது ’’பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஒன்னுமே தெரியாது’’ எனத் தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாஜக கட்சி நிர்வாகிகள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், விழுப்புரம் எல்லிச்சத்திரம் சாலையிலுள்ள பாஜக அலுவலக வளாகத்தினுள் பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ பாஜகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை. மாவட்ட தலைவராக இருக்கக் கூடிய கலிவரதன் பெண்களை மதிப்பது இல்லை. சாதி ரீதியாக திட்டி இழிவுப்படுத்துகிறார். கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. பாஜக நிர்வாகிகள் என கூறவே அசிங்கமாக உள்ளது’’ என்றனர்.