tamilnadu

img

பேசாததும்... பேசியதும்...

இது இந்து பிசினஸ் லைன் (20.07.2019) இதழில் எக்ஸ்.எல்.ஆர்.ஐ மற்றும் மும்பை சட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த  கே.ஆர்.சியாம்சுந்தர், ராகுல் சுரேஷ் சப்கல் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கம். நிர்மலா சீதாராமன் அவர்களின் முதல் பட்ஜெட் “வேலையின்மை” பற்றி மூச்சு விடவில்லை. பொருளாதார ஆய்வறிக்கையும் “காலத்திய உழைப்பாளர் படை ஆய்வு 2017-18” (PLFS) பற்றிய விரிவான பரிசீலனையை செய்யவில்லை. ஆனால் “ராஜஸ்தான் மாடலை” முன் வைத்து தொழிலாளர் சட்ட திருத்தங்களை செய்ய வேண்டுமென்று பொருளாதார ஆய்வறிக்கை பேசியுள்ளது பெரும் முரண்பாடு.

கட்டிங்கா... ரேட்டிங்கா

ரேட்டிங் நிறுவனங்கள்தான் ஒவ்வோர் நிறுவனத்தின் வளர்ச்சி, இடர் ஆகியன குறித்த தகவல்களை மக்களுக்கு தருகின்றன. ஆனால் ரேட்டிங் நிறுவனங்கள் இப்போது கட்டிங் நிறுவனங்களாக மாறிவிட்டனவா என்ற சந்தேகம் வலுக்கிறது.  இதோ ஐ.எல்.எப்.எஸ் நிறுவனத்தில் சிறப்பு தணிக்கை செய்த கிரான்ட் தோர்ன்டான் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை. “ஜூன் 2012  முதல் ஜூன் 2018” வரை ரேட்டிங் நிறுவனங்களுக்கு எவ்வளவோ கவலைகள் ஐ.எல்.எப்.எஸ் நிறுவனம் பற்றி இருந்த போதிலும், அவர்கள் ஜூன் 2018 வரை கொடுத்த ரேட்டிங்குகள் யதார்த்தத்திற்கு சம்பந்தம் இல்லாமலேயே இருந்திருக்கிறது.”  (இந்து பிசினஸ் லைன்- 20.07.2019). இதற்காக ரேட்டிங் கம்பெனிகள்  கவனிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான தகவல்களும் தவறுதலாக தரப்பட்டுள்ளன. சில நேரம் ரேட்டிங்குகள் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன. கட்டிங்குகள் வகை வகையாய் இருந்ததை சிறப்பு தணிக்கை அறிக்கை அம்பலமாக்குகிறது. கம்பெனி நெருக்கடி சூழலில் சிக்கியிருந்த போது ரேட்டிங் கம்பெனிகளின் நிர்வாகிகளுக்கு உல்லாச சுற்றுலா ஏற்பாடு செய்து தரப்பட்டு வெளி நாட்டில் கால் பந்து போட்டியை ரசித்துள்ளனர். வில்லா வாங்கி தரப்பட்டுள்ளது. ரேட்டிங் கம்பெனி சேர்மன் ட்ரஸ்டியாக உள்ள கம்பெனிக்கு 25 லட்சம் நன்கொடை தரப்பட்டுள்ளது.  ஒரு திடுக்கிடும் நாவல் போல சிறப்பு தணிக்கை அறிக்கை இருக்கிறது.


வேலையின்மை குறித்து அதிகாரப்பூர்வமாக நடைபெறுகிற விவாதங்களில் “வேலை களின் என்ணிக்கை” பற்றியே அதிகமாக பேசப்படுகிறது. “வேலைகளின் தரம்” பற்றிய விவாதங்கள் இருப்பதில்லை. ஆனால் இக் கட்டுரை “காலத்திய உழைப்பாளர் படை ஆய்வு 2017-18” (PLFS)” பற்றி செய்துள்ள பரிசீலனையில் ஆண்டுக்காண்டு “வேலைத் தரம்” வீழ்ச்சி அடைந்து வந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. 

அத்தக் கூலிகள்

மேற்கூறிய பி.எல்.எப்.எஸ் ஆய்வு முறையான சம்பளம்/ ஊதியம் பெறுகிற ஊழியர்களிலேயே 71 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் எந்த விதமான “ முறையான வேலை ஒப்பந்தமும்” இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறது.  இப்படி முறையான வேலை ஒப்பந்தம் இல்லாதவர்கள் 2004- 05 ல் ஆண்கள் மத்தியில் 58.9 சதவீதம். 2017-18 ல் அது 72.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 13 ஆண்டுகளில் 13.5 சதவீத உயர்வு. ஆண்டுகள் ஓடுகிற வேகத்திற்கு இணையாக இந்த அத்தக் கூலி சதவீதமும் ஆண்கள் மத்தியில்  உயர்ந்திருப்பதை காண்கிறோம்.  இது பெண்கள் மத்தியில் 2004-05 ல் 59.6 சதவீதம். 2017-18 ல் 66.8 சதவீதம். இது 13 ஆண்டுகளில் 7.2 சதவீத உயர்வு. 

முகமற்ற தொழிலாளர்கள்
இப்படி முறையான ஒப்பந்தம் இருப்பின் நியமனம் பெறுகிற தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ மதிப்பு கிடைக்கும். தாங்கள் பணியாற்றுகிற நிறுவனத்தோடு அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். சட்ட ரீதியான பயன்களை அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து கோர முடியும்.  இத்தகைய ஒப்பந்தம் இல்லாமை உழைப்பாளர் சந்தையில் ஒரு வகையான பாதுகாப்பற்ற உணர்வை தொழிலாளர்களிடம் ஏற்படுத்துகிறது. எந்த பயனையும் அவர்கள் கோர முடியாது. நிறுவனத்தோடு எங்களுக்கு “ வேலை தொடர்பு” இருந்தது என்பதை நிரூபிப்பதே வெற்றி பெற இயலாத போராட்டமாகி விடுகிறது. சீனாவில் அமலில் உள்ள உழைப்பாளர் சந்தைச் சட்டம்-2008ன் படி வேலைக்கு அமர்த்துபவர்கள் தொழி லாளர்களோடு முறையான வேலை ஒப்பந்தங்களை செய்ய  வேண்டும். அதில் பணி நிலைமைகள் குறித்த வரை யறுப்புகள் இருக்கும். சம்பளம் உட்பட... இப்படி ஒப்பந்தத்திற்கு வருவதற்கு வேலை தருபவர்களுக்கு ஒரு ஆண்டு அவகாசம் தரப்படும். அப்படி இல்லாவிட்டால், நிபந்தனையற்ற வேலை ஒப்பந்தத்திற்குள் தானாகவே உள்ளே வந்து விட்டதாக கருதப்படுவார்கள். ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் பொது ஒப்பந்தங்களின் ஊதிய அளவுகளோ, சமமான வேலை நேரம்- சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலோ ஊதியம் வழங்கப்படும்.  தற்போது முன்மொழியப்படும் தொழிலாளர் சட்டங்கள்  “வேலை நேர பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள்” பற்றி பேசினாலும் சீனாவில் உள்ளது போல இவ் விதிகளில் தண்டனைகள் இல்லை. இதை மீறுபவர்களை திருத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. 

நுழைய முடியா இருட்டறை
முறையான ஊழியங்களில் ஊதியம்/சம்பளம் பெறுபவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயமல்லாத உழைப்பாளிகளுக்கு “ஊதியத்துடன் விடுப்பு” (Paid leave) கிடைப்பதில்லை. என்ன அர்த்தம்? இவர்களுக்கு தொழிற்சாலை சட்டம் 1948 பொருந்தாது. கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டம், பிரசவ விடுப்பு சட்டம் 1971 ஆகியனவும் பொருந்தாது என்பதே அர்த்தம். இதையெல்லாம் பெறுவதற்கு சட்ட பூர்வ உரிமை இருந்தா லும் அப்போதும் கிடைப்பதில்லை. மேற்கூறிய இரண்டு காரணங்களில் இரண்டாவது பல இடங்களின் அனுபவம். விடுப்பு மறுப்பு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இருப்பதாக இந்த ஆய்வுகூறினாலும் அதுவே ஒரு கேள்வியை எழுப்புகிறது. பிரசவ விடுப்பு அமலாக்கப்பட்டு வருகிறதா என்பதே அந்த கேள்வி. ஆகவே சட்டம் ஒரு இருட்டறையாகவே உள்ளது.

படும் பாடு
இன்னொன்று வேலை நேரம். 48 மணி நேரம் என்பதை அளவுகோலாகவும், சட்ட ஏற்பாகவும் வைத்துப் பார்த்தால் ஆண்கள் 12 மணி நேரம் சராசரியாய் அதிகமாக வேலை செய்வதாக  கூறியுள்ளது. பெண்கள் 4.7 மணி நேரம் அதிகமாக வேலை செய்கிறார்கள்.  சுய தொழில் செய்வோர் கூலித் தொழிலாளர்களை விடவும் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியத்திற்குரியது இல்லை. தங்களைத் தாங்களே சுரண்டிக் கொள்கிறார்கள் என்பதுதான். வணிகப் போட்டியில் தாக்குப் பிடிக்க வேண்டுமல்லவா! சுய வேலைவாய்ப்பு புரிவோர் ஈட்டுகிற வருமானம், தொழிலாளர் வாங்குகிற சம்பளத்தை விட 2017-18   ஜூலை முதல் செப் வரையிலான காலாண்டில் குறை வாக உள்ளது. பெண்களை பொருத்த வரையில் இந்த  வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது. நகர்ப்புற ஆண்கள் மத்தியில் இந்த வித்தியாசம் அதிகம்.  உழைப்பாளர் சந்தையில் உதைத்து வெளியே  தள்ளப்படுவது ஒரு பிரச்சனை. அப்படியே அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அது மோசமான அனுபவமாகவே மாறுகிறது. பட்ஜெட் பேச வேண்டியதை  பேசவில்லை. பேசக் கூடாததை பேசியிருக்கிறது. 

யாருக்கப்பா இன்சூரன்ஸ்?
பிரதமர் பீமா ஃபசல் யோஜனா வாயிலாக பயிர்க் காப்பீடு வழங்கப்படுகிறது. 70 சதவீத இழப்பீடு விவசாயிகளுக்கு தரப்படுகிறது. இதை 80 சதவீதமாக 90 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை இருந்து  வருகிறது. இதற்கிடையில் விவசாயிகளின் பெயரால் இன்சூ ரன்ஸ் கம்பெனிகள் அமோகமாக லாபம் பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. போராட்டங்கள் வெடிக்கின்றன.  மகாராஷ்டிராவில் ஆளும் பி.ஜே.பியின் கூட்டணி கட்சியான சிவசேனாவே 15 நாள் காலக் கெடுவை அறிவித்து இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வாயில்களில் முற்றுகை இட்டு வருகின்றது. மகாராஷ்டிராவில் 2018-19 காரிஃப் பருவ காலத்தில் விவசாயிகளுக்கு கிடைத்த இழப்பீடு ரூ.3500 கோடி. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்த பிரிமியமோ 4500 கோடி. ஒரு விவசாய பருவத்தில் மட்டும் 1000 கோடி லாபம். விவசாயிகளுக்கு இதுதான் கோபம்.

சத்து இல்லா சாப்பாடு
சர்வதேச உணவு கொள்கை ஆய்வுக் கழகத்தின் எச்சரிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. 2050 ல் உணவு பயிர்களில்  உள்ள புரதம், இரும்பு, துத்த நாக சத்துக்கள் வீழ்ச்சியை அடையும் என்கிறது அதன் அறிக்கை. சுற்றுச் சூழல், அதிகரிக்கும் கரியமில வாயுக்கள்தான் காரணம் என்றும் அது கூறுகிறது. புரதம் 19.5, இரும்பு 14.4, துத்த நாகம் 14.6 என்கிற சதவீத அளவுகளில் இந்த வீழ்ச்சி இருக்கும். அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பார்லி, உருளைக் கிழங்கு, சோயா பீன்ஸ், பழங்கள், காய்கறிகள் ஆகியன பாதிப்பிற்கு ஆளாகப் போகிற உணவுப் பொருட்கள். ஏழை, நடுத்தர நாடுகளே இந்த இழப்பை அனுபவிக்க போகின்றன. தெற்காசியா, மேற்கு ஆசியா, சஹாராவிற்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகள் மற்றும் பழைய சோவியத் நாடுகள் ஆகியனவே அவை.