பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரங்களை நட்டு, எத்தியோப்பிய மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
பருவ நிலை மாற்றத்தால் பூமியின் நிலப்பகுதி மிக அதிகப்படியான வெப்பம் அடைந்து, காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. காற்று மாசுபாட்டின் காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து உலக நாடுகள் பேசி கொண்டு மட்டுமே இருக்கும் சூழலில், நேற்று எத்தியோப்பியா மக்கள், 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட இரண்டாவது நாடாக எத்தியோப்பியா திகழ்கிறது. இதன் வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வரும் நிலையில், மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட எத்தியோப்பிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நேற்று, எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது தலைமையில் ‘பசுமை மரபு’ என்ற பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு, 12 மணி நேரத்தில் 6.6 கோடி மரக்கன்றுகளை நட்டிருந்ததே உலக சாதனையாக கருதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.