tamilnadu

img

தமிழக அரசு, சிறைத்துறை ஏடிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு...

தூத்துக்குடி:
காவல்துறையினரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை மற்றும் மகன் ஆகியோரின் மரணம் குறித்து   தமிழகஅரசின் உள்துறை முதன்மைச் செயலாளர், சிறைத்துறையின் ஏடிஜிபி ஆகியோர் நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனிதஉரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி   கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தாங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் பேருந்து நிலையம் அருகில் மரக்கடை நடத்தி வந்தார். அருகில் அவரதுமகன் பெனிக்ஸ், செல்போன் கடை நடத்தி வந்தார்.கடந்த 19 ஆம் தேதியன்று அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமை யிலான காவல்துறையினர், கடையை அடைக்கும்படியும், அங்கு கூட்டமாக நின்றிருந்தவர்களை கலைந்து செல்லும்படியும் கூறியுள்ளனர்.

இதில், ஜெயராஜுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயராஜை போலீசார், காவல் நிலையம்அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த ஜெயராஜி்ன் மகன் பெனிக்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்று தந்தையை விடுவிக்கும்படி  கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் போலீசார், இவர்கள் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.பின்னர், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தந்தை,மகனும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு என்று கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் திங்களன்று அனுமதிக்கப்பட்டனர். திங்களன்று இரவுபெனிக்ஸ் உயிரிழந்தார். செவ்வாயன்று காலையில் ஜெயராஜ்  உயிரிழந்தார்.ஆனால் இதில் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் மரணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்று  தமிழக உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,க்கும் மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, உரிய ஆவணங்கள், காவல்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராபதிவுகளுடன் எட்டு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய டி.ஜி.பி.க்கும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.