தூத்துக்குடியில் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
ரூ.32.5 கோடி செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட இந்த மினி டைடல் பூங்காவில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் 600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"தென் தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்காவாக அமைந்துள்ள தூத்துக்குடி டைடல் பூங்கா அப்பகுதியில் வாய்ப்புகளுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்து, இளம் திறனாளர்களுக்குப் புதிய வாசலைத் திறந்து விட்டுள்ளது. பட்டாபிராமில் திறந்து வைக்கப்பட்ட டைடல் பூங்கா, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மற்றும் தூத்துகுடியில் திறந்து வைக்கப்பட்டுள்ள நியோ டைடல் பூங்காக்களினால் தமிழ்நாட்டின் வளர்ச்சிச் சரிதம் பல்கிப் பெருகிறது. மாநிலமெங்கும் தொடங்கப்பட்டுள்ள டைடல் பூங்காக்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி. அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது. வேலூர், திருப்பூர். காரைக்குடி என அடுத்து தொடங்கப்படவுள்ள டைடல் பூங்காக்கள் மேலும் வாய்ப்புகளை விரிவடையச் செய்யும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.