சிதம்பரம்,மே 13-கடலூர் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய உறுப்பினராக பதவி வகித்த பி.பி கலியபெருமாள் (85), உடல் நிலை சரியில்லாமல் கடந்த மாதம் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வாழப்பாடி ராம.சுகந்தன் தலைமை வகித்தார். கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் நகர்பெரியசாமி முன்னிலை வகித்தார். காங் காரிய கமிட்டி அகில இந்திய உறுப்பினர் மணிரத்னம் வரவேற்றார். விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்தனர். பிபி கலியபெருமாள் மகனும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பி.பி.பி சித்தார்த்தன் நன்றி கூறினார்.கே. பாலகிருஷ்ணன் தனது உரையில், “பி.பி கலியபெருமாள் மாணவர் பருவத்திலே காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு கொள்கையில் உறுதியாக இருந்தார். தீவிர வாசிப்பு பழக்கம் கொண்டவர். பதவிகள் இவரை தேடி வந்தது இவர் பதவியை தேடிசெல்லவில்லை கொள்கையில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் மாற்று கட்சினர்களிடம் முரண்பாட்டுடன் பழகியது இல்லை” என்றார்.