திருவள்ளூர், செப்.21- தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகனங்களை சோதனை செய்கிறோம் என்ற பெயரில் காவல்துறையினரின் அராஜகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே சோலையம்மன் நகரை சேர்ந்த பிரியா. இவர்கள் வெள்ளியன்று (செப்.20) இரவு தமது இருசக்கர வாகனத்தில் செங்குன்றத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காந்திநகரில் வாகன சோதனை ஈடுபட்டிருந்த சோழவரம் காவல்துறையினர், பிரியாவின் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துபோது, பின்னால் வந்த லாரி பிரியாவின் கால் மீது ஏரியது. இதில் கால் முறிந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினரின் இந்த அராஜகத்தை கண்டித்து செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தை போராட்டத்தை கலைத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழவரம் ஒன்றியச் செயலாளர் ஜி.வி.எல்லையன் கூறுகையில்,“வாகன சோதனையின்போது ஊர்காவல் படையின் அராஜகத்தை தடுக்க வேண்டும், வாகன ஓட்டிகளிடம் அத்துமீறிவது, லட்டியை காட்டி மறிப்பது, மாற்று உடையில் திடீரென வாகனங்களை நிறுத்துவது போன்று நடவடிக்கையால் இருசக்கர வாகனங்களில் வருவோர் நிலைதடுமாறி கீழே விழுந்து பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுத்த காவல்துறையினரே காரணமாக உள்ளனர். இதை தடுக்க வேண்டும். விபத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.