tamilnadu

img

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரிய பயன்கள்.... அரசாணை வெளியிட சிஐடியு வேண்டுகோள்.....

திருப்பூர்:
கடந்த 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் பணப் பலன்கள், நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்களுக்கு வழங்க புதிய அரசு அரசாணை வெளியிடுமாறு தமிழ்நாடு  கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிஐடியு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரியசெயல்பாட்டையும், தொழிலாளர்கள் பாதுகாப்பையும் கை விட்டு விட்டார்கள்.சிஐடியு தொழிலாளர் முன்னேற்ற பேரவைமற்றும் அனைத்து சங்கக் கூட்டு கமிட்டிகளின் மூலம் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கட்டுமான வாரியத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் பணம் இருந்தும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் சொற்ப அளவில் பணப் பயன்களைத்தான் முந்தைய அரசு வழங்கியது. பெரும் துன்ப துயரங்களை அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் அனுபவித்தனர்.தற்பொழுதும் கொரோனா  வைரஸ் இரண்டாம் அலை துவங்கி தொழிலாளர்களையும், ஏழை மக்களையும் முடக்கி போட்டுள்ளது. வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. கடந்த காலத்தில் தொழிற்சங்கங்கள் 5000 ரூபாய் கேட்டு கோரிக்கை வைத்தன. ஆனால் ரூ. 2000 மட்டுமே முந்தைய அரசு வழங்கியது.

இரண்டாம் அலையில் வேலை இழந்துள்ள, நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.3000 வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது. மேலும் முந்தைய ஆட்சி காலத்தில் வாரிய கூட்டத்தில் முடிவு செய்த நல திட்டங்களையும் கூட அமல்படுத்தவில்லை. அதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1,800 ரூபாய் கல்வி உதவி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ரூ.2,400, 11 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். உயர் கல்விக்கு பத்தாயிரம் ரூபாயும், மாத பென்சன் 3000 ரூபாயும், குடும்ப பென்சன் ஆயிரம் ரூபாயும், தொழிலாளி மனைவியின் மகப் பேறு நிதி 6000 ரூபாய், பணியிடங்களுக்கு வெளியே நடைபெறும் விபத்துக்களுக்கு நான்கு லட்ச ரூபாயும், இயற்கை மரணத்துக்கு இரண்டு லட்ச ரூபாயும், ஓய்வூதியதாரர் மரணமுற்றால் 5000 ரூபாயும் நிதி வழங்க வேண்டும். 

இந்த கோரிக்கைகள் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி கட்டுமான தொழிலாளர்களுக்கு  வாரிய கூட்டத்தில் முடிவு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த பணப்பயன் திட்டங்களுக்கு  முந்தைய  அரசுகடைசிக் காலம் வரை   அரசாணை வெளி யிடவில்லை.எனவே  தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முதல் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே  அரசாணை வெளியிட்டு அமலாக்கிட வேண்டும். 

வாரியச் செயல்பாடு
மேலும் முந்தைய அரசின் பிரதிநிதிகளை கொண்ட வாரிய  கமிட்டி  அமைக்கப்பட்டு   சிஐடியு தொழிலாளர் முன்னேற்ற பேரவை, ஏஐடியூசி, ஐஎன்டியூசி  உள்ளிட்ட சங்கங்கள் புறக்கணிக்கப்பட்டன. வாரிய செயல்பாட்டை  ஜனநாயகத்திற்கு விரோதமாக சீர்குலைத்தனர். எனவே அனைத்து தொழிற்சங்கங்களையும் ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவம் செய்து, வாரிய முத்தரப்பு கமிட்டியை புதுப்பிக்க வேண்டும். சி.ஐ.டி.யு. சங்கத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும். அத்துடன், ஓய்வூதியம் கேட்டு மனு செய்த நாள் முதலாக அரியர்ஸ்சுடன் ஓய்வூதியத் தொகை மூன்றாயிரமாக உயர்த்தி வழங்கவும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கவும் வேண்டும். மருத்துவ பாதுகாப்பு இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்வி உதவி, திருமண உதவி, தீபாவளி போனஸ், இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், உபகரணங்கள்  வாங்குவதற்கு  வங்கியில் வட்டியில்லா கடன், வருங்கால சேமிப்பு நிதி, பிரசவ நிதி, வீடற்ற தொழிலாளிகளுக்கு இலவச வீடு போன்ற  திட்டங்களையும், பணப் பயன்களையும் தமிழக நல வாரியத்தில் அமலாக்க வேண்டும்.

பிரசவ உதவி ரூ.30000 வழங்க வேண்டும். திருமண உதவி ஆண் தொழிலாளிக்கு ரூ.20000, பெண் திருமண உதவி ரூ.30000 வழங்க வேண்டும். அனைத்து கல்வி உதவிகளையும் உயர்த்த வேண்டும். இன்ஜினியர் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.60000, மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்க்கு இலவச வீட்டுமனை, மானியத்துடன் கூடிய வீட்டு வசதி வழங்க வேண்டும். அகில இந்திய கட்டிட கட்டுமான தொழிலாளர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும். குடும்ப பென்சன் 5 ஆண்டுக்கு மாதம் ரூ.2000 வீதம் வழங்க வேண்டும். தீபாவளி காலங்களில் பதிவு பெற்ற தொழிலாளிகளுக்கு பண்டிகை போனஸ் வழங்க வேண்டும், வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க 2 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்க வேண்டும், பதிவு பெற்ற தொழிலாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், வெளி மாநில தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின்     வேலை வாய்ப்பு, பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு,நலவாரிய பயன்கள் போன்ற   தொழி லாளர்களின் வாழ்வாதாரம்  மேம்பட கோரிக்கைகள் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.