உடுமலைப்பேட்டையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராடிப் பெற்ற வனவுரிமைச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி இரண்டாவது நாளாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை முதல் உடுமலைப்பேட்டையில் வனத்துறை அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. 500க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். வன உரிமைச் சட்டம் 2006 அடிப்படையில் திருமூர்த்தி மலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்பது பிரதானமான கோரிக்கையாகும். மாவட்ட வன அலுவலர் போராட்டக் களத்திற்கே வராமல் பிடிவாதமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று சட்டத்தில் இல்லாத ஒன்றை வனத்துறை தரப்பில் சொல்லிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.