திருப்பூர், மே 3 –திருப்பூர் கோயில் வளாகத்தில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த கோயில் பூசாரி மீது, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் (போக்சோ) சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி ஆகியோர் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பூரில் கோயில் ஒன்றில் வழிபடச் சென்ற 8ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமிக்கு பிரசாதம் தருவதாகச் சொல்லி அங்குள்ள பூசாரி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்ததுடன், அந்த பகுதி மக்களும் முற்றுகையிட்டு அந்த பூசாரியை தனி அறையில் பூட்டி வைத்து, திருப்பூர் ஊரக காவல் நிலைய காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அந்த பூசாரி மீது காவல் துறையினர் போக்சோ சட்டப்படி உரிய பிரிவில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரிடம் காவல் துறையினரே, அந்த சிறுமியின் எதிர்காலம் பாதிக்கும், மானம் போய்விடும் என்பது போலச் சொல்லி குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாகத் தெரிகிறது. இதனால் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யாமல் சாதாரண பிரிவில் பெயரளவுக்கு ஒரு வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தப்ப வைப்பதற்கு காவல் துறை முயற்சி செய்வது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது.தமிழகத்தில் பல பகுதிகளில் பெண்கள், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
குறிப்பாக பொள்ளாச்சி சம்பவமும், கோவையில் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் தமிழகத்தையே உலுக்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள், பணியிடங்கள் என சமூகத்தின் பொதுத்தளத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையில் தமிழக அரசும், காவல் துறையும் குற்றம் செய்வோரை சட்டப்படி கடுமையாக தண்டிப்பதன் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் காவல் துறையே இதுபோன்ற சம்பவங்களில் சட்டப்படி செயல்படாமல் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி, மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்து சமரசமாகப் போகச் சொல்வது போன்ற இழிவான நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.எனவே திருப்பூரில் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரி மீது போக்சோ சட்டப்படி உரிய வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தியின் பெயரால் இதுபோல் ஏமாற்றும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆட்படும் சிறுமிக்கு உரிய நியாயம் கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுப்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.