உடுமலை, ஆக. 29- டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்வு முகாமின் ஒருபகுதியாக வியாழனன்று உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு முதல் 24வது வார்டு வரை உள்ள மக்களின் குறைகளை கேட்டறிய காவல்நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துணை வட்டாட்சியர் பொன்ராஜ், நகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார் தலைமையில் முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உடுமலை பசுபதி வீதி அர்பன் பேங்க் அருகில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 2004) கடையால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இன்று வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்கள். ஆகவே, உடனடியாக மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.