tamilnadu

img

பணியிட இழப்புகளை தடுத்து நிறுத்துக... கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டம் துவங்கியது

திருவாரூர்:
கூட்டுறவு நிறுவனங்களில் மேலாண்மை இயக்குநர் பணியிடங்களை நிலை உயர்வு செய்யும் நடவடிக்கைகளால் ஏற்படும் இழப்புகளை தடுக்கவலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில்மாநிலம் முழுவதும் மூன்று கட்ட போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடுஅரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.சௌந்தரராஜன் தலைமையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டமும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் எம்.மகாலெட்சுமி, மாவட்ட செயலாளர் பி.விஜயன், மாவட்ட பொருளாளர் எம்.ஐயப்பன், வட்ட நிர்வாகிகள் கோபி, அலெக்ஸ், கார்த்திக்கேயன், சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் மாநில தலைவர் எம்.சௌந்தரராஜன் கூறுகையில், அரசின் நடவடிக்கையின் காரணமாக 32 துணை பதிவாளர்கள் மற்றும் 54 கூட்டுறவு சார் பதிவாளர் பணியிட இழப்புகள் ஏற்படும். துறை சீரமைப்பு என்றபெயரில் 2009 ஆம் ஆண்டு 636 பணியிடங்கள் குறைக்கப்பட்டதன் காரணமாக இன்று வரை கூட்டுறவுத்துறை அலுவலகங்களிலும், களப்பணிகளிலும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் ஊழியர்களுக்கு மேலும் துன்பம் தரும்வகையில் தற்போதைய நடவடிக்கையை அரசு துவங்கியுள்ளது. இது கூட்டுறவு துறையின் செயல்பாட்டினை சீரழிக்கும் என்று அரசிற்கு தெரியபடுத்த விரும்புகிறோம். எனவே அரசு இந்தநடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 20ஆம் தேதியன்று அடையாள அட்டை அணிந்து பணிபுரியும் இயக்கம் நடைபெறும். 31 ஆம் தேதியன்று மண்டல இணை பதிவாளர் மற்றும் பதிவாளர் அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழகமுதல்வருக்கு முறையீடு அனுப்பப் படும். செப்டம்பர் 11 ஆம் தேதியன்றுசிறு விடுப்பெடுத்து பட்டினி போராட் டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.