தேனி:
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தஊராட்சித் தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் அதிமுக ஒன்றியச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின்தேனி மாவட்டச் செயலாளர் டி. வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் இ. தர்மர்,கடமலை - மயிலை ஒன்றிய செயலாளர் பி.மணவாளன் ஆகியோர் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கை:-
தேனி மாவட்டம் ஆத்தங்கரைப் பட்டி ஊராட்சித் தலைவராக அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தலைவராக தேர்வு செய்யப்பட் டுள்ளார்.கடமலைகுண்டு அதிமுக ஒன்றியச் செயலாளரும், முன்னாள் ஊராட்சித் தலைவருமான கொத்தாளமுத்து ஊராட்சித் தலைவராக இருந்தகாலத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீரை தன் சொந்த குடும்பங்களுக்கு, விவசாயத்திற்கு, பால் பண்ணைகளுக்கு விதிகளை மீறி தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் ஊராட்சித் தலைவர், நிர்வாகரீதியாக தவறாகப் பயன்படுத்திய குடிநீரை தடுத்து சரிப்படுத்த முயன்றபோது ஊராட்சித் தலைவர் பழனிச் சாமியை, கொத்தாளமுத்துவும் அவரது மகன் கார்த்திக்கும் சாதியைச் சொல்லி கேவலமாக, இழிவாக பேசிமிரட்டியுள்ளனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ள கார்த்திக் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து தலைவரை சாதியைச்சொல்லி அவமதித்து, “உனக்கு சேர்தேவையா? எனக் கூறி இருக்கையில் உட்கார விடாமல் தடுத்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.சுதந்திரதினத்தன்று ஊராட்சி அலுவலகத்தில் தலைவரை தேசியக்கொடி ஏற்ற விடாமல் அதிமுகஒன்றியச் செயலாளர் கொத்தாளமுத்து தடுத்து சாதியைச் சொல்லி திட்டி “நீயெல்லாம் கொடி ஏற்றலாமா?” எனக் கூறியுள்ளார். இது தீண்டாமைக் கொடுமையின் உச்சமாகும்.
ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் ராஜேந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். ஜனவரி 26 குடியரசு தினவிழா, சுதந்திரன விழாவிற்கு பள்ளி நிர்வாகத்தின் மூலம் ஊராட்சித் தலைவரை விழாவில் பங்கேற்கச் செய்வதில்லை, அழைப்பதுமில்லை. அதிமுக ஒன்றியச் செயலாளரே தேசியக்கொடியை ஏற்றிக் கொள்வார். இதுஜனநாயக விரோதச் செயலாகும்.இது சம்பந்தமாக துணை முதல் வரை இரண்டு மாதங்களுக்கு முன்புநேரில் சந்தித்து மனுக் கொடுத்துள் ளார். மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் தெரிவித்தும இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிப்பதாய் உள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தை ஜனநாயகப்பூர்வமாக செயல்பட விடாமல் தடுத்து தாம் சொல்வதைத்தான் கேட்டு செயல்பட வேண்டுமென அதிமுக ஒன்றியச் செயலாளர் கூறுவது ஏற்புடையதல்ல. “ஊராட்சி நிர்வாகம் சட்டப்படி செயல்பட விடாமல் தடுப்பது, சாதியைச் சொல்லி அவமானப் படுத்துவது, அரசு விழாக்களில் புறக்கணிப்பு செய்வது, ஊராட்சி அலுவலகப்பொருட்களை அடித்து சேதப்படுத்துவது” என்ற நிலை தொடர்கிறது.தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சித் தலைவரை பணி செய்ய விடாமலும், சாதியைச் சொல்லித் திட்டி கேவலப்படுத்தி மிரட்டி வரும் அதிமுக ஒன்றியச் செயலாளர் கொத்தாளமுத்து, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பழனிச்சாமி தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றுவதற்கு உரியபாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு, காவல்துறை எடுக்க வேண்டும்.