தஞ்சாவூர், ஜன.21- தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை திங்களன்று, முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின்ராவத் தொடங்கி வைத்தார். தஞ்சாவூரில் 1940-ஆம் ஆண்டு விமானப்படைத் தளம் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் விமானப்படை தளம் செயல்பாட்டில் இருந்தது. இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன. இந்நிலையில் தென்னிந்தியாவின் பாதுகாப்பிற்காக அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுகோய் ரக போர் விமானங்கள் இங்கிருந்து இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த விமானப்படை தளம் தரம் உயர்த்தப்பட்ட விமானத் தளமாக அறிவிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தொடர்ந்து சுகோய் விமானங்கள் மூலம் விமானிகளுக்கு பயிற்சியும் தொடங்கப்பட்டது. சுகோய்- 30 ரக போர் விமானத்திலிருந்து தரை இலக்கை நோக்கி பிரமோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த 22.3.2019 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய விமானப்படையில் “டைகா் ஷார்க்ஸ்” என்ற 222-ஆவது போர் விமானப்படை பிரிவு தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரமோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 எண்ணிக்கையிலான சுகோய் -30 ரக போர் விமானங்களும் நிறுத்தப்படும். இந்த படைப்பிரிவை முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஸ்.பதோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
பாக். உடன் போர் வர வாய்ப்பில்லை
இதில் பிபின் ராவத் பேசியதாவது: முப்படைகளுடன் இந்த படைப்பிரிவை இணைப்பதால், எதிர்காலத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். பாதுகாப்பு துறையில் இது மிகப்பெரிய மாற்றமாகும். முதன் முறையாக பிரமோஸ் ஏவுகணை விமானத்தில் பொருத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். பல ஆண்டுகளாக இந்த முயற்சி நடைபெற்று தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்திய பெருங்கடல் அருகாமையில் உள்ளதால், தஞ்சாவூர் விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றது. சீன நாடு இந்திய பெருங்கடலில் தனது படை பலத்தை நிறுவுவதற்கும், தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தை தரம் உயர்த்துவதற்கும் தொடர்பில்லை. இருந்தாலும் நமது படைப்பிரிவை தரம் உயர்த்தியாக வேண்டும் பாகிஸ்தானுடன் தற்போதைய சூழலில் போர் வர வாய்ப்பில்லை, இருந்தாலும் நம்முடைய படையை நாம் எப்போதும் தயார் நிலையிலேயே வைத்துள்ளோம்” என்றார்.