tamilnadu

img

விம்பிள்டன் டென்னிஸ் திணறும் முன்னணி நட்சத்திரங்கள்

டென்னிஸ் உலகின் அதிக பரிசுத்தொகை கொண்ட (தோராயமாக 340 கோடி - இந்திய மதிப்பில்) கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.   பரிசுத்தொகை அதிகம் என்பதால் தரவரிசையில் இல்லாத வீரர்கள் - வீராங்கனைகள் லண்டன் நகருக்குப்  படையெடுத்தனர். இதனால் தகுதி சுற்று ஆட்டம் கூட 6 நாட்கள் நடைபெற்றது.  முதல் சுற்று ஆட்டங்கள் திங்களன்று தொடங்கியது. தரவரிசையில் இல்லாத வீரர் - வீராங்கனைகளை முன்னணி நட்சத்திரங்கள் சர்வசாதாரணமாக நினைத்து அசால்ட்டான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.   இதே முறையைப் பின்பற்றிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சக நாட்டு 15 வயது சிறுமி கோரி காபு 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பந்தாடி டென்னிஸ் உலகில்  கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும் புதிய சுனாமியை உருவாக்கினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் கூட பரவாயில்லை.ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாதாரண தொடக்கச் சுற்றில் கூட டை பிரேக்கர் வரை நட்சத்திர வீரர்கள் போராடித் தான் வெற்றியை ருசிக்கின்றனர்.  “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்” என்ற பழமொழிக்கு ஏற்ப முன்னணி வீரர் - வீராங்கனைகளை கத்துக்குட்டிகள் மிரட்டி வருவதால் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடக்கத்திலேயே சுவாரஸ்யமாக நகர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.