மதுரை ஜூலை 12- சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றுபரவலில் அரசியல் தலைநைகரான மதுரை மற்ற மாவட்டங் களை விஞ்சி விரைவாக முன்னேறிவருகிறது. கொரோனா வேகத்திற்கு டாஸ்மாக்-கடைகளும் ஈடுகொடுத்து வருகின்றன. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்ற பெயரை கொரோனா காலத்தில் பின்னுக்குத்தள்ளி டாஸ்மாக் விற்பனையில் நம்பர் ஒன் என்ற பெயரை தக்கவைத்துக்கொள்ள முயன்றுவருகிறது. மதுரையில் முழு ஊரடங்கு ஜூலை 14-ஆம் தேதி வேரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார மாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில் அலங்காநல்லூரில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக அலங்காநல்லூரில் கடை எண்- *5292* மற்றும் அலங்காநல்லூர் *கேட்கடையில்* உள்ள டாஸ்மாக் கடை களில் ஒரு கி.மீ. தூரத்திற்கு வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கி செல்கின்றனர். மதுரை நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள அலங்காநல்லூருக்கு 20 நிமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் குடிமகன்கள் முன்னெச்சரிக்கையாக கூடுதலாக பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். சிலர் பெட்டிக் கணக்கிலும் வாங்கிச்செல்கின்றனர். அலங்காநல்லூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது கொண்ட யம்பட்டி. அலங்காநல்லூர் விற்பனையை விஞ்சிவிடுவோம் என்று சொல்லுமளவிற்கு இங்கும் கட்டுக்கடங்காத கூட்டம். பார்கள் இல்லாததால் ஆற்றங்கரையோரம், சாலையோரங்கள் பாராக மாறிவிட்டது. கொரோனா அச்சத்தோடு வாழும் கிராம மக்கள் மதுபிரியர்களால் கூடுதல் அச்ச மடைந்துள்ளனர். ஜூலை 31-ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு எப்படி அமலாகிறது என்பதற்கு இந்த டாஸ்மாக் கடைகளே உதாரணம். கொரோனா அச்சம், மதுப் பிரியர்களின் அச்சத்திலிருந்து கிராம மக்களை பாதுகாக்க அலங்காநல்லூர், கேட்கடை, கொண்டயம்பட்டி டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.