tamilnadu

img

மக்கள் நாயகன் சலீம் வெல்வது உறுதி

ஏப்ரல் 18ம் தேதியன்று தமிழக தேர்தலுடன் மேற்குவங்கத்தில் இரண்டாவது கட்டமாக மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதில் ராய்கஞ்ச் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் மேற்குவங்க முக்கியத் தலைவர்களில் ஒருவருமான முகம்மது சலீம் போட்டியிடுகிறார். 2014ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற தொகுதி ராய்கஞ்ச்.எனவே இம்முறை முகம்மது சலீமை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ் மிகவும் முனைப்புடன் செயல்பட்டது. எந்த வன்முறையையும் செயல்படுத்த தயங்கவில்லை. அதே போல சலீம் தோற்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமும் கூட! ஏனெனில் மக்களவையில் மோடி அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு சில எதிர்கட்சி உறுப்பினர்களில் சலீமும் ஒருவர்.


தன் உயரம் அறியாத காங்கிரஸ்!


இந்த தொகுதியில் காங்கிரசுக்கும் கணிசமான வாக்குகள் உண்டு. 2014ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத்தில் 21ரூ வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் சுமார் 9ரூ வாக்குகளை பெற்றது. எனினும் இந்திய தேர்தல் முறையில் உள்ள தவறுகள் காரணமாக மார்க்சிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் வென்றன. இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை தோற்கடிக்க மார்க்சிஸ்ட் கட்சி புதிய உத்தியை முன்வைத்தது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் வென்ற 4 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடாது என அறிவித்தது. அதே போல காங்கிரசும் மார்க்சிஸ்ட் கட்சி வென்ற இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரியது. இந்த ஆலோசனையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டால் 6 தொகுதிகளில் திரிணாமுல் மற்றும் பா.ஜ.க. தோற்பது உறுதி என்பது மட்டுமல்ல; மேலும் இதே ஏற்பாடை வேறு சில தொகுதிகளிலும் நீட்டிக்கவும் வாய்ப்பு இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவு இரண்டு கட்சிகளின் ஊழியர்களிடையேயும் மக்களிடமும் பெரும் உற்சாகத்தை விளைவித்தது. ஆனால் காங்கிரஸ் இந்த நியாயமான ஆலோசனையை ஏற்கவில்லை.சலீம் வென்ற ராய்கஞ்ச் தொகுதி தனக்கு வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தது. மேலும் மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக உள்ள சில தொகுதிகளையும் வேண்டும் என கேட்டது. இதன் காரணமாக உடன்பாடு உருவாகவில்லை. 


மக்கள் நாயகன் சலீம்


கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக பரிணமித்தவர் முகம்மது சலீம். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இரண்டு முறை மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சலீம், சட்டமன்ற உறுப்பினராகவும் இடது முன்னணியின் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தனது அயராத பணியின் காரணமாகவும் மக்களிடம் நெருங்கிய தொடர்பு காரணமாகவும் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக திகழ்பவர்.கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 100ரூ பங்கேற்றவர். அனைத்து முக்கிய விவாதங்களிலும் இவரது குரல் முழங்கியது. சில முக்கிய தனிநபர் தீர்மானங்களையும் கொண்டு வந்துள்ளார். தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை 110ரூ பயன்படுத்தியவர் எனும் பெருமைக்கு உரியவர். 


இதற்கும் மேலாக மிக முக்கிய தகுதி ஒன்று இவருக்கு உண்டு. நாடாளுமன்ற நாட்கள் தவிர ஏனைய நாட்களில் இவர் தனது தொகுதியில்தான் சுற்றுப்பயணத்தில் இருப்பார். தினமும் நூற்றுக்கணக்கான மக்களை சந்திப்பார். அவர்களது கோரிக்கைகளை மாநில அரசாங்கத்திடம் போராடி பெற்றுத் தருவார். மழையிலும் வெயிலிலும் மக்களுடன் மக்களாக இருந்தார். வெள்ளத்தின் பொழுது ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு மக்களுடன் மக்களாக அலைந்தார்; மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உத்தரவாதம் செய்தார். சுருக்கமாகச் சொன்னால், ஒரு கம்யூனிஸ்ட் எப்படி சிறந்த நாடாளுமன்றவாதியாக இருக்க வேண்டும் என்பதற்கு தோழர் சலீம் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார் எனில் மிகை அல்ல.5 ஆண்டுகளாக இவ்வாறு செயலாற்றி கட்சியை ராய்கஞ்ச் தொகுதியில் வலுப்படுத்திய முகமது சலீமை இந்த தொகுதியில் தோற்கடிப்பது என்பது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தேவையாக உள்ளது. 


சலீம் மீது கொலைவெறி தாக்குதல்


18.4.2019 அன்று நடந்த தேர்தலில் தமது வன்முறை உத்திகளை திரிணாமுல் காங்கிரஸ் அரங்கேற்றியது. சலீமின் மீதே நேரடியாக தாக்குதல் தொடுக்கப்பட்டது. ராய்கஞ்ச் தொகுதியில் இஸ்லாம்பூர் வட்டத்தில் 22 வாக்குச் சாவடிகள் மிக மிக அதிக பதற்றம் கொண்டவை என சலீம், பலமுறை நேரடியாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். எனினும் அங்கு மத்திய படைகள் அனுப்பப்படவில்லை.காலை சுமார் 8 மணிக்கு இந்த வாக்கு சாவடிகளுக்கு சலீம் சென்றார். அங்கு திரிணாமுல் குண்டர்கள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி இருந்தனர். மக்களின் வாக்குகளை குண்டர்களே பதிவு செய்த வண்ணம் இருந்தனர். வாக்கு சாவடி அதிகாரிகள் மிரட்டப்பட்டிருந்தனர். இதைக் கண்ட சலீம், வாக்கு சாவடிக்குள் சென்று அதனை உள்பக்கமாக தாழிட்டார். பின்னர் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் உடன் இங்கு வந்து நிலைமையை காணுமாறு வற்புறுத்தினார். நேரம் கடந்தது; ஆனால் எவரும் வரவில்லை.இதற்கிடையே சலீமின் கார் தாக்கப்பட்டது; அவரது உதவியாளரும் ஓட்டுநரும் கடுமையாக தாக்கப்பட்டு இரத்தக் காயம் அடைந்தனர். தங்களது முறைகேடு திட்டத்தை சலீம் தடுக்க முற்படுகிறார் எனும் ஆத்திரத்தில் திரிணாமுல் குண்டர்கள் இரும்பு தடிகளை கொண்டு வாக்கு சாவடியின் கதவுகளை உடைக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் சலீம் கதவுகளைத் திறந்து வெளியில் வந்து திரிணாமுல் குண்டர்களை தன்னந் தனியாக துரத்தினார்.ஒரு பரந்த மைதானத்தில் தனியாக தோழர் சலீம்! அவரை சுற்றி 50க்கும் மேற்பட்ட திரிணாமுல் குண்டர்கள்! அவர்கள் கைகளில் துப்பாக்கி, இரும்பு தடிகள், அரிவாள் என சகல ஆயுதங்களும் இருந்தன. அவர்களை நோக்கி தோழர் சலீம் சவால் விட்டார். தைரியம் இருந்தால் தன்னை சுடுமாறு சத்தம் போட்டார். அந்த நொடியில் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் சலீமின் தைரியம் திரிணாமுல் குண்டர்களை பின்வாங்க வைத்தது. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஏராளமாக வந்து சேர்ந்தனர். இனி இந்த வாக்கு சாவடியில் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த திரிணாமுல் குண்டர்கள் வேறு இடம் சென்றனர். திரைப்படத்தில் வருவது போல எல்லாம் நடந்த பிறகு மத்திய படைகள் வந்தன.


சலீம் வெல்வது உறுதி!


ராய்கஞ்ச் தொகுதியில் 80ரூ வாக்கு சாவடிகளுக்கு மத்திய படைகள் அனுப்பப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். மீதம் 20ரூ சாவடிகள் ஏன் விடுபட்டன என்பது மிகப்பெரிய கேள்விக் குறி! அதுவும் குறிப்பாக மிக மிக அதிக பதற்றம் கொண்டவை என வேட்பாளர் சலீம் திரும்பத் திரும்ப முறையிட்டும் ஏன் இஸ்லாம்பூருக்கு மத்திய படைகள் வரவில்லை? சலீமை தோற்கடிக்க வேண்டும் எனும் முனைப்புதான் இதற்கு காரணம் ஆகும். சலீம் தோற்க வேண்டும் என்பதில் திரிணாமுல் மற்றும் பாஜக தீவிரமாக உள்ளன. எனினும் இந்த தடைகளை தாண்டி தோழர் சலீம் வெல்வது உறுதி என்பதுதான் கள நிலைமை!மேற்குவங்கத்தில் எப்படி வன்முறை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இஸ்லாம்பூர் நிகழ்வுகள் ஒரு சாம்பிள்தான்! சலீம் உட்பட இடது முன்னணி வேட்பாளர்கள் 5 பேர் தாக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களுக்கே இந்த நிலை எனில் எளிய மக்களின் நிலை கூற வேண்டியது இல்லை! எனினும் மேற்கு வங்க மக்கள் வன்முறை சக்திகளுக்கு பாடம் புகட்ட தயாராக உள்ளனர் என்பதுதான் கள நிலைமை!


அ.அன்வர் உசேன்