மதுரை, ஜூன் 22- மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தமிழக அரசு இன்னும் எய்ம்ஸ் நிர்வாகத்திடம் வழங்கவில்லை என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையின் தாக்குதலில் எஸ்.ஆலங்குளத்தை அடுத்துள்ள முடக்கத்தானைச் சேர்ந்த விவேகாநந்த குமார் உயிரிழந்தார். அவரது பிரிவை தாங்கிக் கொள்ளமுடியாமல் அவரது மனைவி கஜப்பிரியா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர்களது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் தாய் பாசத்திற்காக ஏங்கி நிற்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கஜப்பிரியாவை சந்தித்து மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆறுதல் கூறினர். கஜப் பிரியாவிற்கு அளித்து வரும் சிகிச்சை குறித்தும் அவ ரது உடல்நலம் குறித்தும் மருத்துவமனை டீனிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் கூறியதாவது:- விவேகாநந்தகுமாரின் மரணம் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இது குறித்து சிபி சிஐடி காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவது உடனடித்தேவையாகும். அதைத் காலதாமதமின்றி வழங்கவேண்டும். கஜப்பிரியாவிற்கு அரசுப் பணி வழங்கவேண்டுமென்றார். இதே கருத்தை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் வலியுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமை யவுள்ள இடத்தை தமிழக அரசு இன்னும் எய்ம்ஸ் நிர்வாகத்திடம் வழங்கவில்லை. விரைவில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசு இடத்தை எய்ம்ஸ் நிர்வாகத்திடம் வழங்கவேண்டும். இல்லை யென்றால் ரூ.12 கோடி செலவில் சுற்றுச்சுவரை மட்டும் கட்டிவிட்டு மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஓராண்டுகள் காத்திருக்கவேண்டும். மதுரை நகரில் 60 சதவீத அளவிற்கே குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை நோக்கி மதுரை சென்றுகொண்டி ருக்கிறது. அதைப் போக்க பெரியாறிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். மதுரை மாவட்டத்திற்கு உடனடியாக ஆட்சியர் நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.