கருத்துக் கணிப்பு முடிவு
சென்னை, அக்.15- தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜர் தொகுதிக்கும் இம்மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரி, காமராஜர் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. தமிழகத்தில் அதிமுகவும், புதுச்சேரியில் அதன் கூட்டணியான என்ஆர் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. மதச் சார்பற்ற கட்சிகளின் கூட்டணி சார்பில் அனைத்து கட்சித் தலைவர்களும் சூறாவளியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களுக்காக முதலமைச்சரும், துணை முதல்வரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களைக் கொண்டு பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசின் வழி காட்டுதலில் 2031 வாக்காளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளை சென்னையில் செவ்வாயன்று(அக்.15) வெளியிட்டனர். அதில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு 40.90 விழுக்காடு ஆதரவும், விக்கிரவாண்டியில் திமுகவின் புகழேந்திக்கு 43.60 விழுக்காடும், புதுச்சேரி காமராஜர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு 44.60 விழுக்காடு ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளின்படி மூன்று தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு 43.20, நாங்குநேரியில் 37.60, புதுவையில் என்ஆர் காங்கிரஸ்க்கு 39.10 விழுக்காடு ஆதரவே உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.