சென்னை:
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் திங்களன்று (ஆக. 17) மழை பெய்ய வாய்ப் புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:வங்கக் கடலில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதன் காரணமாக திங்களன்று (ஆக. 17) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.சனிக்கிழமை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மேற்குவங்கம் மற்றும் ஒடிசா, வடக்குஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.