ஹைதராபாத்
தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதி சுங்கச்சாவடி பாலத்தின் அருகே இளம்பெண் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றி சாத்நகர் காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் களமிறங்கினர். விசாரணையில் கொலையுண்டவர் பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பதும் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார் என தெரியவந்தது. எனினும் பிரியங்கா ரெட்டி கொலைக்கான உறுதியான காரணம் என்னவென்று தெரியவில்லை. கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டு இருக்க கூடும் என காவல்துறை வட்டாரம் கூறியுள்ள நிலையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா ரெட்டி நிலையைக் கண்டு கொதித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது," பாதுகாப்பு மிக்க நகரம் என நான் நினைத்து கொண்டிருக்கும் ஹைதராபாத் போன்ற நகரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு யாரைக் குறை சொல்வது என எனக்குத் தெரியவில்லை. குறை கூறுவதற்கு வார்த்தைகளும் இல்லை. பெண்கள் எந்த நேரத்திலும் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பு நிறைந்த நாடாக நம் நாடு எப்போது உருவாகும். இதுபோன்ற அனைத்து கொடூர சைக்கோக்களை உடனடியாக வேட்டையாட வேண்டும். கொல்லப்பட்ட பிரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்து உள்ளார்.
நடிக்கும் வேளையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் குற்றச் சம்பவங்களுக்குச் செய்தி வெளியிட மாட்டார். தற்போது முதல் முறையாகக் கொதித்த படி செய்தி வெளியிட்டுள்ளார்.