நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 4 பேரில் மூன்று பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் நான்காவது குற்றவாளியான அக்சய் குமார் சிங், சமீபத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அமர்வில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார். மேலும், இவ்வழக்கு வேறு அமர்வில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, "நிர்பயா வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. ஆதலால், மனுதாரரின் மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கெனவே வழங்கிய தண்டனையை உறுதி செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.