சேலம், ஜுன் 2-சேலத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தோர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்திற்கு காரணமான தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி எழுத்தர், டேங் ஆப்பரேட்டர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தோர் தங்களுக்கு குடிநீர் வழங்க மறுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாழனன்று சேலம் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இவர்களை அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் கே.சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாரியப்பன், சாமியப்பன் ஆகியோர் சனியன்று தம்மநாயக்கன்பட்டி பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விசாரித்தனர்.அப்போது, தம்மநாயக்கன்பட்டியில் வசித்து வரும் மேற்குறிப்பிட்ட ஐந்து குடும்பங்கள் மீது ஊராட்சி எழுத்தர் சீனிவாசன் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர் பழனிசாமி ஆகியோர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு அவர்களுக்கு தண்ணீர் விநியோகத்தை தடுத்துள்ளனர். இப்பிரச்சனை சம்மந்தமாக ஒன்றிய ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டும் மேற்படி குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்குஎவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்த நிலையில், அவருக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு கூட தண்ணீர் வழங்கவில்லை. இதுபற்றி ஊராட்சி மன்ற எழுத்தர்மற்றும் டேங் ஆப்பரேட்டரிடம் முறையிட்டபோது, அவர்கள் மிகவும் தரக்குறைவாகபேசியுள்ளனர். இதன்காரணமாகவே மனம்உடைந்த நாங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.ஆகவே, தண்ணீர் விடாமல் பாரபட்சம்காட்டுவது, லஞ்சம் பெறுவது, பொதுமக்களை தரக்குறைவாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் எழுத்தர் சீனிவாசன் மற்றும் டேங் ஆப்பரேட்டர் பழனிசாமி ஆகியோர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம்மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்டச்செயலாளர் பி.ராமமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.