ரிசர்வ் வங்கியிடம் ரூ.3 லட்சம் கோடி (4,300 கோடி டாலர்கள்) கூடுதல் இருப்பு (ரிசர்வ்) உள்ளதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் இது 1.5 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் அதன் ஆய்வு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க ரிசர்வ் வங்கி வசம் உள்ள உபரி நிதியை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. இதனை அடுத்து, ரிசர்வ் வங்கி வசம் உபரியாக உள்ள நிதியில் எந்த அளவுக்கு அரசுக்கு அளிக்கலாம் என்பது குறித்து ஆராய ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வசம் உபரியாக உள்ள நிதியை அரசுக்கு வழங்கக் கூடாது என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில் பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் மத்திய வங்கிகள் குறித்து நடத்திய ஆய்வு அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் உள்ள கூடுதல் இருப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சக அதிகாரிகளில் பெரும்பாலோர் பட்ஜெட் இலக்கை எட்டுவதற்கு வசதியாக ரிசர்வ் வங்கியிடம் உள்ள கூடுதல் நிதியை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் திடீரென ஏற்படும் நிதிச் சரிவை ஈடுகட்ட ரிசர்வ் வங்கியிடம் நிதி இருக்க வேண்டியது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கிக்கு ஆதரவாக வாதிடும் பொருளாதார அறிஞர்களும் உள்ளனர்.
அவசர கால நிதிக்கு ரூ. 1 லட்சம் கோடி இருந்தால் போதும் என்று பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் அமைப்பின் தலைமை பொருளாதார அறிஞர் சென் குப்தா தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியிடம் உள்ள நிதி அளவை பாதியாகக் குறைத்தால் அதாவது 6.25 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறைத்தால் ரூ.1.30 லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைக்கும் என்று சென் குப்தா குறிப்பிட்டார்.