சென்னை, ஜுன் 4-மத்தியில் மீண்டும் மதவெறி பாஜக அரசு அமைந்துள்ள நிலை யில், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி களுக்கும் இனிதான் அதிகமான வேலை காத்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.மறைந்த திமுக தலைவர் கருணா நிதியின் 96வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் திங்களன்று நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் அம்சங்கள் வருமாறு:
புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி போட்டியிட்டது. வேலூர்மக்களவை தொகுதி தேர்தல், சதியால் நிறுத்தப்பட்டது. 39 தொகுதி களில் தேர்தல் நடைபெற்றது. அதில்38இல் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறோம். நாம் ஒன்று சேர்ந்து, ஒருங் கிணைந்து, ஒருமித்த கருத்தோடு தேர்தல் பணியில் ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக் கிறோம். இந்த வெற்றி அனைவரது வெற்றியாகும்.38 இடங்களில் வெற்றி பெற்ற தால் என்ன பயன் என்கிறார்கள். நான்திமுக எம்.பி.க்களுக்கு மட்டுமல்ல, கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கும் சொல்வது என்னவென்றால், இனி தான் உங்களுக்கு அதிக வேலை இருக்கிறது. இந்திய அளவில் ஜன நாயகத்தைக் காப்பாற்ற சோஷலிச கொள்கை ஓங்க, சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ குரல் கொடுக்க வேண்டும்.இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் மேம்பட, கச்சத்தீவை மீட்க, மரண தண்டனையை ஒழிக்க, மேகதாது அணையை தடுக்க, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப் போராடுவோம். தி.மு.க. அணி வெற்றி பெற்று என்ன பயன் என கேட்கிறார்கள். மக்களவையில் இதற்கான பதில் கிடைக்கும். ஏறக்குறைய 2, 3 ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து பல போராட்டங்களை ஒன்று சேர்ந்து நடத்தினோம்.இது தொடர வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை நான் கேட்பது, மாதா மாதம் பகுதி பகுதியாகச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி குறைகளை தீருங்கள். அதுகுறித்த அறிக்கையை நீங்கள் மாதந்தோறும் தர வேண்டும்.
விரைவில் உச்சநீதிமன்றம் அளிக்க இருக்கும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதாவது,அதிமுக ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் ஓட்டு போட்ட வழக்கு வர இருக்கிறது. அதன் தீர்ப்புக்குப் பிறகு இந்தஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்று 5 நாட்கள் கூட ஆகவில்லை. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து கேடு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு மறுநாளே 246 ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. சித்தா, ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசையும் உத்தரவு போட வைத்தது. இப்போது,இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்தியை முதலில் திணித்த ராஜாஜியே பின்னர் அந்த நிலையில் இருந்து மாறினார். திணித்தவர்கள் மாறினார்கள். எதிர்ப்பவர்கள் மாறமாட்டோம்.மொழிக் கொள்கை விஷயத்தில் பாஜக கபட நாடகம் நடத்துகிறது. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி களின் கொள்கை. கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடும் இந்த நாளில், இந்தி திணிப்பை என்றைக்கும் நாங்கள் எதிர்ப்போம். தமிழுக்கு சோதனை வருகிறது என்றால், தமிழர்களாக ஒரே குரலில்ஓங்கி ஒலிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.