பழனி:
பழனி அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான கல்திட்டை சங்க கால ஆய்வேளிர் மன்னர்கள் மற்றும் வம்சாவளியினரின் நினைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பழனி ஆயக்குடி அருகேயுள்ளது ஆமைக்கரடு. இங்கு இறந்தவர்களுக்காக எழுப்பப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்திட்டையை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, பழனிஆண்டவர் கல்லூரி பண்பாட்டுத் துறைப் பேராசிரியர் அசோகன் ஆகியோர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.
இந்த கல்திட்டை தமிழர்களின் ஏழு பிறப்பு நம்பிக்கையை குறிப்பதாகக் கூறப்படுகிறது. கடையெழு மன்னர்களில் ஒருவரான ஆய் ஆண்டிரனின் வம்சாவழியினரின் நினைவிடங்கள் என கூறப்படுகிறது. ஆமைக்கரடின் தெற்குப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்டபுதிய கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. பாறையின் மேற்புறத்தில் தேங்காய் வடிவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு உருண்டை கற்களுக்கு நடுவில் செருகி வைத்தது போல் உள்ளது. நான்கு அடி உயரம் உள்ள இந்த உருண்டைக்கல் ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டதை காண முடிகிறது. இந்த கல்திட்டையில் உள்ள பலகைக் கல்லில் ஏழு ஏழு கட்டங்களாக மொத்தம் 49 கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆமைக்கரட்டில் ஏற்கனவே சங்க காலத்தைச் சேர்ந்த கல்வீடு, புறாக்கூடு அமைப்பிலான கல்திட்டையும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.