இந்த மாநாடு நடைபெறுகிற காலத்தில், உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்திவருகிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு உலக முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் மீது இரக்கமற்ற சுரண்டல் நடத்துகிறது. நவீன தொழில்நுட்பத் திறன் உதவியுடன் உற்பத்தித் தொழில்களைப் பிரித்தது. இதன் மூலம் ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு அவர்களால் முடிந்தது. நீண்டகாலப் போராட்டங்கள் மூலமாகத் தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளைப் பறித்தார்கள். தொழில் வேலைமுறைகளை மாற்றியமைத்தார்கள். நிரந்தர வேலையைக் குறைத்தனர். ஒப்பந்த-தற்காலிக வேலைகளை அதிகரித்தார்கள். தொழிற்சங்கங்கள் பலவீனமாகின. இவையெல்லாவற்றின் விளைவாக தொழிலாளர்களின் சம்பளம் குறைந்தது. உழைப்பு உருவாக்குகிற செல்வம் கணிசமான அளவில் குறிப்பிட்ட சில முதலாளிகளிடம் குவிந்தது. மக்களிடையே உள்ள பொருளாதார சமத்துவமின்மை பெருமளவு அதிகரித்தது. செல்வத்தின் மீது தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவுவதற்கு ஏகாதிபத்தியம் சுதந்திரம்-இறையாண்மையுள்ள நாடுகளின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தியது. மேற்காசியா யுத்தக் களமாக ஆனது. ஏகபோக மூலதன சக்திகளுக்கு எதிராகப் போராடும் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி-ஜனநாயக இயக்கங்களை நிர்தாட்சண்யமாக ஒடுக்குவதற்கு ஏகாதிபத்தியம் துணிந்தது. ஜனநாயக முறையிலான தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வந்த அரசுகளை கவிழ்ப்பதற்கும் ஏகாதிபத்தியம் முயற்சி செய்தது. உலகமயக் கொள்கைகள் மூலமாக உலக வங்கி-ஐஎம்எஃப், உலக வர்த்தக நிறுவனம் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களைப் பயன்படுத்தி உலகின் பெரும்பகுதி மக்கள் மீது தங்களின் ஆக்டோபஸ் தன்மையிலான ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தினார்கள். சோஷலிச சிந்தனைகளுக்கு எதிராக கடுமையான தத்துவத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டார்கள்.
முதலாளித்துவ அமைப்பு ’வெல்ல முடியாதது’ என்ற அகங்காரத்திலிருக்கிற ஏகாதிபத்தியத்தை அதிர்ச்சியுறச் செய்த சம்பவம்தான் 2007-08-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி. அமெரிக்காவிலிருந்து ஆரம்பித்த இந்த நெருக்கடி உலககெங்கும் வியாபித்தது. வங்கிகளும் தொழில்களும் கடுமையான நெருக்கடியில் சிக்கின. பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இல்லாமல் போயின. முதலாளித்துவ அமைப்பின் தனிநிறம் மக்கள் முன்பு அம்பலப்பட்டது. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முதலாளித்துவ அரசுகள் பின்பற்றிய கொள்கைகள் மக்களுக்கு பெரும் பாதிப்பாக மாறியது. சம்பளமும் பென்சனும் மற்ற அனுகூலங்களையும் குறைக்கிற நடவடிக்கைகளைத் தொழிலாளி வர்க்கம் எதிர்க்க முன்வந்தது. ஐரோப்பா முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. நிகழ்காலத்தில் எல்லா பெரிய முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் மற்ற மக்கள் பிரிவினரின் எழுச்சிகள் உருவாயின. இந்தச் சூழலில்தான் இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஜனவரி 8அன்று தேசிய அளவிலான வேலை நிறுத்தம் செய்வதென தீர்மானித்தது. 2014-ல் முதலாவது மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தேசம் தழுவிய அளவில் மூன்று வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. ஏகபோக முதலாளித்துவ நலன்களைப் பாதுகாக்கிற நவீன-தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தவுடன் மோடி அரசின் தாராளமயக் கொள்கைகளுக்கு வேகம் அதிகரித்தது.
நாட்டின் அடிப்படை முக்கியத்துவம் உள்ள பொதுத்துறையை முழுவதுமாகத் தனியார்மயமாக்குவதே மோடி அரசின் முயற்சியாகவுள்ளது. முன்பு பொதுத்துறை நிறுவங்களின் குறைந்த அளவு பங்குகளை விற்பது திட்டமாக இருந்ததென்றால் இப்போது அவற்றையெல்லாம் தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு முழுவதுமாக விற்கிறார்கள். பிபிஸிஎல், பிஇஎம்எல், ஏர்இந்தியா, எச்பிஸி முதலிய பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் விற்பதற்கான நடவடிக்கையைத் துவக்கியது. பாதுகாப்புத் துறையின் கீழுள்ள ஆயுத உற்பத்திச் சாலைகளையும் ரயில்வேயின் உற்பத்தி நிறுவனங்களையும் தனியார்மயமாக்குதெனத் தீர்மானித்தார்கள். ரிலயன்ஸின் ஜியோவிற்காக பிஎஸ்என்எல்-லை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். விமான நிலையங்களும் துறைமுகங்களும் தனியார் ஏகபோக முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். மின்சாரம், நிலக்கரித் துறைகளும் தனியார்மயமாக்கும் ஆபத்தில் உள்ளது. பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவது இந்தியாவின் சுயசார்பைப் பலவீனப்படுத்திவிடும். நாட்டின் தொழில்சட்டங்களை முதலாளிவர்க்கத்திற்குச் சாதகமாகத் திருத்தம் செய்கிறார்கள். 44 சட்டங்களை நான்கு கோட்களாக்கி மாற்றுவதென முடிவு செய்தார்கள். அவற்றில் ஒன்று-கோட் ஆன் வேஜஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகள் அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. மீதமுள்ள மூன்று கோட்கள் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றும் முயற்சியுள்ளது.
நிறைவேற்றப்பட்ட ’கோட் ஆன் வேஜஸ்’ என்ற சட்டம், குறைந்தபட்ச சம்பளம் என்ற முறையை பலவீனப்படுத்தியது. இந்தியன் லேபர் கான்பெரன்ஸ் அங்கீகரித்ததற்கு ஏற்ப தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் ஒவ்வொரு மாதமும் 18 ஆயிரம் ரூபாய் (ஒவ்வொரு நாளும் 600 ரூபாய்) ஆக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்திக் கொண்டுள்ளன. வேஜ் கோடில் கூறுவது ஒவ்வொரு நாளும் 174 ரூபாய்க்குக் குறையாத சம்பளம் என்பதாகும். வேலை நேரம் தினசர் 9 மணி நேரமாக இருக்கும் என்றும் கோட் ஆன் வேஜஸின் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தால் 8 நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய இந்தச் சட்டம் தொழில் முதலாளிகளுக்கு உரிமை வழங்குகிறது. மீதமுள்ள மூன்று கோட்களின் விதிமுறைகளும் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதிப்பதாகும். வளர்ச்சி முழக்கங்களை எழுப்பி அதிகாரத்திற்கு வந்த மோடியின் ஆட்சியில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்கிறது. ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதம் எதிர்பார்க்கப்பட்டிருந்ததென்றால் இந்த ஆண்டு அது 4.3 சதவீதமாகக் குறைந்தது. தொழில் வளர்ச்சி விகிதம் சரிந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த அரைநூற்றாண்டில் பெருமளவில் அதிகரித்தது. தொழில்கள் வீழ்ச்சி மூலம் சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் வேலையிழந்தனர். விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
விலை உயர்வினால் மக்களுக்குப் பெரும் திண்டாட்டம். பெட்ரோல், டீசல், வெங்காயம் முதலானவற்றின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்தவண்ணமுள்ளது. மக்களுக்கு எந்தவொரு நிம்மதியும் அளிக்க முயற்சி செய்யவில்லை. அதே சமயம் ஏகபோக முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் மூலம் பெரும்தொகையை வாரிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய மட்டத்திலான போராட்டங்களுக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். தொழில் துறைகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற தொழிலாளர் போராட்டங்கள் அரசாங்கத்தை அச்சமுறச் செய்கின்றன. தொழிலாளர்களின், மக்களின் ஒற்றுமையைச் சிதைப்பதென்ற குறிக்கோளுடன் பிஜேபியும் சங்கபரிவாரும் மதவெறியைப் பற்றிப்பரவிடச் செய்ய முயற்சிக்கிறது. இரண்டாம் மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சில சட்டங்கள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவது என்ற குறிக்கோள் கொண்டதாக உள்ளன. முத்தலாக் தடை, யுஏபிஏ சட்டத் திருத்தம், காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவையெல்லாம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தத்துவங்களுக்கு எதிராக உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்கிற மதச்சார்பின்மை-ஜனநாயகம், குடியுரிமை, சமத்துவம் ஆகிய தத்துவங்களையெல்லாம் மோடி அரசு காற்றில் வீசியது. இந்தச் சூழலை எதிர்கொள்ள முடியவேண்டுமென்றால் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை கூடுதலாக வலுப்படுத்த வேண்டும். வாழ்க்கைப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் மூலமாகத்தான் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். தொழிலாளி வர்க்கம் இந்த விசயத்தில் பெரும்பங்கு வகிக்கவேண்டியுள்ளது. இந்தக் கண்ணோட்டத்துடன்தான் சிஐடியு செயல்படுகிறது. ’’தொழிலாளர்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ள கொள்கைகளை அடையாளம் காணுவது, சம்பந்தப்பட்ட கொள்கைகளுக்கு அடிப்படையாகவுள்ள அரசியல் என்னவென்பதைப் புரிந்து கொள்வது’’ என்ற முழக்கத்தை எழுப்பித்தான் சிஐடியு தொழிலாளர்களை அணுகுகிறது. கிராமம்-நகரம் வித்தியாசம் இல்லாமல் ஸ்தாபனரீதியாகத் திரட்டப்படாத மற்றும் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் அனைவரிடமும் இந்த விசயத்தைக் கொண்டு சேர்ப்பதையே சிஐடியு தனது லட்சியமாகக் கொண்டுள்ளது. இந்த லட்சியத்தை நிறைவேற்ற சிஐடியு அமைப்பை கூடுதல் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த மாநாடு சிஐடியு-வின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.