tamilnadu

img

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 12 நாட்கள் முழு ஊரடங்கு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, ஜூன். 15- கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊடரங்கு அமல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் ஜுன் 15 திங்களன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர்,முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.  சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.  குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

சென்னையில் உள்ள 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம்  செயல்படுவதுடன், 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, வீடுவீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.  இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது.
இதே போன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 அதிகாலை முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழுமையாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்படுகிறது

எந்தெந்த பகுதிகள்...

பெருநகர சென்னை காவல்எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளும்.  திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுடன் திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகள். பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  அனைத்து ஊராட்சிகள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். 

கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகளும் அமலாகும்.

மாநில அரசுத் துறைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும். இந்த 12 நாட்களில்  சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் உரிய  பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப் படும்.

இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.  சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும். 

வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும். வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதி கிடையாது.  

வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப் படும். தானியங்கி பணம்  வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில்  செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. 

இரு ஞாயிறுகளில் முழு தடை

21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளில்  எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.   இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம்,  மருத்துவ மனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.   அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார்  வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடு களும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.

ரூ‌.1000 நிவாரணம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லை யென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது.  பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.