ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கைது செய்யப் பட்டுள்ள அரசியல் தலைவர்களில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியும் ஒருவர் ஆவார். அவரைக் கைது செய்துள்ள, ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் காஷ்மீரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், மெகபூபாவைச் சந்திப்பதற்கு, தன்னையும் கூட அனுமதிக்க மறுப்பதாக, மெகபூபாவின் மகள் சனா இல்டிஜா ஜாவேத் வேதனைதெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:காவலில் வைக்கப்பட்டுள்ள என் அம்மாவைச் சந்திக்க வேண்டும் என நிறைய முறை காவல்துறையினரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அவர் கள் எனக்கு அனுமதி தர மறுத்தனர். ஒரு மகளான நான் என் தாயைக்கூட சந்திக்கக் கூடாதா?
சிறப்புச் சட்டம் 370, நீக்கப்பட்டத் துக்கு எதிராக ஏதேனும் நடந்துவிடும் என அஞ்சியே இப்படிச் செய்கிறார்கள்.என்னைச் சந்திக்கவும் யாரையும் அனுமதிப்பதில்லை. நான் சாதாரண காஷ்மீரி பெண்,இந்தியக் குடிமகள், அவ்வளவுதான். அப்படிப்பட்ட அரசியலில் ஈடுபடாதஎன்னைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. காவலர்கள் என்னைக் கைதுசெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காஷ்மீர் மக்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் எந்த அளவிற்கு கண் மூடித்தனமாகப் பறிக்கப்பட்டுள்ளது என்பதை, இந்திய நாடும் சர்வதேச சமூகமும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, எங்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.” இவ்வாறு சனா இல்டிஜா குறிப்பிட்டுள்ளார்.