புதுதில்லி:
இலவச மின்சாரம் யாருக்கும் கிடையாது என்றும், பணம் செலுத்தினால் மட்டும்தான் மின்சாரம் கிடைக்கும் எனவும் மத்திய மின்சாரத்துறை இணையமைச்சரான ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.‘பவர் டிரேடிங் கார்பரேசன் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழா, தில்லியில் திங்களன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசுகையில் ஆர்.கே. சிங் மேலும் கூறியிருப்பதாவது:
“குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு மாநில அரசுகள் இலவச மின்சாரத்தை வழங்கலாம். ஆனால் அந்த மின்சாரத்துக்கான கட்டணத்தைப் பின்னர் அவர்கள் செலுத்தித் தான் ஆகவேண்டும். முதலீடு எதுவும் இல்லாமல்நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. மின்சாரத்துக்கும் விலை உள்ளது. அதைச் செலுத்தித்தான் ஆகவேண்டும். மத்திய அரசைப்பொறுத்தவரை, நீங்கள் முதலில் கட்டணம் செலுத்தினால் தான் பின்னர் மின்சாரம் உங்களுக்குக் கிடைக்கும். இலவச மின்சாரம் என்று எதுவும் கிடையாது. ஒருவேளை மாநில அரசுகள் தங்களது மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நினைத்தால் வழங்கட்டும். ஆனால் அந்தமின்சாரத்துக்கான கட்டணத்தை மாநில அரசுகள் தங்களது சொந்த பட்ஜெட் நிதியிலிருந்துதான் செலுத்தியாக வேண்டும். இனி இதைத்தான் நாங்கள் செய்யப்போகிறோம். மின்சாரத் துறையில் கடினமான நிதி நெருக்கடி நிலவுகிறது.மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாமல் இழுத்தடிப்பதால்தான் இந்த நெருக்கடி ஏற் பட்டுள்ளது.” இவ்வாறு மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.