புதுதில்லி:
காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தின்போது மட்டும் சுமார் 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் ராணுவத்தினருக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இயற்கை எழில் கொஞ்சம் காஷ்மீருக்கு அழகே, அதன் வனப்பகுதிகள்தான். இந்த வனப்பகுதி, மாநிலத்திற்கு அழகூட்டி வருவது மட்டுமல்லாமல், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.
“வனப்பகுதி உள்ளவரை காஷ்மீர் மக்களின் உணவுக்குப் பஞ்சமில்லை” என்று காஷ்மீரைச் சேர்ந்த புகழ்பெற்ற துறவி ஷேக் உல் ஆலம், 15-ஆம் நூற்றாண்டிலேயே கூறியுள்ளார். அவரின் இந்த வாசகம், காஷ்மீரின் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இப்போதும் பொறிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் ஆட்சியாளர்களும் இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை.ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் மெகபூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, பாஜக விலக்கிக் கொண்ட பின்னர், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.அதன்பிறகு, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாகவும் காஷ்மீர் மாற்றப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும், துணை ராணுவப்படையினரும் காஷ்மீரில் குவிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த காஷ்மீரும் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறை வைக்கப்பட்டனர்.
இந்நிலையில்தான், காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினருக்கு தங்குமிடங்கள் கட்டுகிறோம், சாலை வசதியை ஏற்படுத்துகிறோம் என்று கூறி, சுமார் 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த செப்டம்பர் 18, அக்டோபர் 2, 17 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வனத்துறை ஆலோசனைக்குழு கூட்டத்தில், ராணுவத்தினரின் 198 திட்டங்களுக்காக அவர்களுக்கு 727 ஹெக்டேர் வனப்பகுதி நிலங்களை ஒப்படைப்பதற்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்டவற்றில் 60 சதவிகித நிலங்கள் சாலையமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கும், 33 சதவிகித நிலங்கள் அதாவது 243 ஹெக்டேர் நிலங்கள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரின் தங்குமிடங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 243 ஹெக்டேர் நிலத்தில்தான் குல்மார்க் வனவிலங்குகள் காப்பகம், கேமில் ஜீலம் பள்ளத்தாக்கு, சபா மற்றும் ஜம்மு வனப்பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த பகுதியில் மட்டும் 1847 மரங்கள் உள்ளன. இவற்றை ராணுவம் வெட்டி வீழ்த்த உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வனத்துறை ஆலோசனைக்குழுவே கலைக்கப்பட்டுவிட்டது. அந்தக் குழுவை கலைப்பதற்கு முன்னதாகத்தான் அவசர அவசரமாக நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.