tamilnadu

img

நாட்டின் ஜனநாயகமே தோற்றுக் கொண்டிருக்கிறது

புதுதில்லி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5-ஆம் தேதி, 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், பல்வேறு விவரங்களை எடுத்துரைத்து உரையாற்றியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாட்டின் மொத்த வருமானம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களும் பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை.வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் குறித்து எதுவுமே இல்லை. வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு சிறந்த உதாரணம் சொல்வதானால் 62 ஆயிரம் கலாசி பதவிகளுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் முதுகலை பொறியியல் பட்டதாரிகள் 4 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள், 40 ஆயிரம் பேர் எம்.இ. படித்தவர்கள்.இத்தகைய பொருளாதாரத்தை தான் நீங்கள் (மோடி அரசு ) வைத்திருக்கிறீர்கள். இதற்காக நிதியமைச்சரை குறை சொல்லவில்லை. ஆனால் உண்மை நிலவரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். 
மாற்றங்கள் செய்வது எல்லாமே சீர்திருத்தமாகி விடாது. யதார்த்தத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டால், நீங்கள் தைரியமாக இருந்திருக்க வேண்டும். மக்களவையில் 303 பேர் உங்களுக்கு இருக்கிறார்கள். உங்கள் கூட்டாளிகளையும் சேர்த்தால், 352-க்கு மேல் இருக்கிறீர்கள். எனினும் நீங்கள் ஏன் தைரியமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை?

2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு இருக்கும்? என்பதைக் கூட பாஜக அரசால் கணிக்க முடியவில்லை. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை சீர்திருத்தம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.இன்று இந்திய அணி கிரிக்கெட்டில் தோற்றுப் போனதற்கு வருத்தப்படுகிறோம். கிரிக்கெட் அணி மட்டுமல்ல, நமது ஜனநாயகமும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கர்நாடகா, கோவா மாநிலங்களில் நிலவும் அரசியல் குழப்பங்களைக் காண்கிறோம். இது பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தர ஏஜென்சிகள், சர்வதேச அமைப்புகள் இந்தியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையால், பொருளாதார விஷயங்களில் பின்வாங்குவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு ப. சிதம்பரம் பேசியுள்ளார்.