tamilnadu

img

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது

புதுதில்லி:
மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் திமுக எம்பி., டி.ஆர்.பாலு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ் ஆகியோர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை மீது எடுக்கப்பட்டநடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினர். இதற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியிருப்பதாவது:  இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கை 1956 ஆம் ஆண்டின் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு முரணாக இருப்பதால், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆதரவளிக்கவில்லை. நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை. மருத்துவக்கவுன்சில் விதிமுறைப்படி நடத்தப்படும் நீட் தேர்வு, எவ்வித விலக்கு அளிப்பதற்கும் இடமின்றி நாடு முழுவதற்கும் பொருந்தும்.நீட்தேர்வை ரத்து செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.நீட் தேர்வை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.