புதுதில்லி:
நாடாளுமன்ற மக்களவையின் புதிய தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், மக்களவை இணையதளத்தில் இடம்பெற்றிருந்த, ஓம் பிர்லாவின் வாழ்க்கைக் குறிப்பில், ‘ஓம் பிர்லா ஒருஆர்எஸ்எஸ் உறுப்பினர்’ என்ற தகவல் திடீரென நீக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா, அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர். பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர். இன்னும் சொல்லப்போனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தண்டனையும் பெற்றவர். அந்த அடிப்படையிலேயே, பாஜக அவருக்கு மக்களவைத் தலைவர் பதவியை வழங்கியது.
ஆனால், இந்த தகவல்கள் அப்படியே மக்களவை இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது, பாஜக-வுக்கே உறுத்தலாகப் போனது. மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டவர்தான் இன்றைய சபாநாயகர் என்றால், உலகம் என்ன நினைக்கும்? என்று கருதத் துவங்கினர். இதையடுத்து, ஓம் பிர்லாவின் ஆர்எஸ்எஸ் தொடர்புகள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அவர்களாகவே நீக்கியுள்ளனர்.