tamilnadu

img

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்மீது போலீசார் துப்பாக்கிச்சூடு -சிபிஎம் கண்டனம்

புதுதில்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றங்கள் வளாகத்தில் வழக்கறிஞர்கள்மீது காவல்துறையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 2ஆம் தேதியன்று புதுதில்லியில் அதிகமான அளவில் நீதிமன்றங்கள் இயங்கிவரும் தீஸ் ஹசாரி நீதிமன்றங்கள் வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த இடத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி, மாநில செயற்குழு உறுப்பினர் நாது பிரசாத் மற்றும் பிரிஜேஷ் குமார் சிங் இன்று (திங்கள் கிழமை) சென்று பார்வையிட்டோம். நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தம் செய்துவரும் வழக்கறிஞர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்தோம்.

வழக்கறிஞர்களுக்கு எதிராக தில்லி போலீஸ் மிகவும் விரிவான அளவில் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. வன்முறையில் ஈடுபட்ட போலீசார், வழக்கறிஞர்கள் அறைகளையும் சேதப்படுத்தி இருக்கின்றனர். பெண் வழக்கறிஞர்களையும் அடித்துக் காயப்படுத்தி இருக்கின்றனர். மிகவும் கொடூரமான முறையில் தடியடி நடத்தியுள்ளனர். வழக்கறிஞர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். தில்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வருவதால்,  மத்திய அரசாங்கமும், மத்திய உள்துறை அமைச்சரும் இந்த விஷயத்தில் தலையிட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்குத் தலையிட வேண்டும்.

இவ்வாறு கே.எம். திவாரி தெரிவித்துள்ளார்.

(ந.நி.)