புதுதில்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக செய்திகளை வெளியிடத் தடைகோரிய மனுவைத் தள்ளு படி செய்து தில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக ஊடகங்களில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடியது. அப்போது, இந்தப் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் "இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட ரூ.1.5 கோடி வரை தருவதற்கு சிலர் முயன்றனர்’ என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் கடந்த புதன்கிழமை நடை பெற்றது. அந்த அமர்வில், நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், தீபக் குப்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். விசாரணையின் முடிவில் தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து வழக்கு ரைஞர் உத்சவ் சிங் பைன்ஸ் வைத்த ஆவணங்களின் அடிப்ப டையில் முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் என்று உச்ச நீதி மன்றம் அறிவித்தது. மேலும், இந்த புகாரில் சதிச் செயல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழுவுக்கு சிபிஐ மற்றும் உளவுத்துறை, தில்லி காவல்துறையினர் ஆகியோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்
அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக செய்திகளை வெளியிடத் தடைகோரிய மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.இதுதொடர்பாக ‘ஊழலுக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு’ என்னும் அமைப்பைச் சேர்ந்த ஹரிஷ் பாபு என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் ‘வெறுமனே குற்றச்சாட்டு கூறி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தினை ஆதாரமாகக் கொண்டு தலைமை நீதிபதி மீது தவறான செய்திகள் பரப்பப்படு கின்றன; குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இத்தகைய செய்திகள் பகிர்வது என்பது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். இது நமது நீதித்துறை மீது நமது நாட்டு ஊடகங்கள் நிகழ்த்தும் தாக்குதலாகும்.’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மத்திய அரசு, செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம். தில்லி அரசு,பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா,ஸ்க்ரால் நியூஸ், தில்லி காவல்துறை ஆணையர் இவர்களுடன் கூகுள், வாட்ஸ் அப், யூ ட்யூப் மற்றும் லிங்க்டின் ஆகியவற்றின் செயல் தலைவர்கள் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக அவர் சேர்த்திருந்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக செய்திகளை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவானது திங்க ளன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனுதாரர் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தினை அணுகலாம் என்று அறிவுறுத்தினர்.