மும்பை
அரபிக்கடலின் தென்கிழக்கு, மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு ஆகிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டது. புயலின் தாழ்வு நிலை நாளுக்குநாள் திசை மாறிக்கொண்டிருந்தது. அதாவது வடக்கு பகுதியை நோக்கியே தொடர்ந்து பயணித்த இந்த நிசர்கா மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையைக் கடந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதாகவும், மின் கம்பங்கள், மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.