tamilnadu

img

மே 23-இல் மக்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது உறுதி ரபேல் விவகாரத்தில் மோடி ‘திருடர்’தான் : ராகுல் காந்தி மீண்டும் அதிரடி

புதுதில்லி:

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி திருடர்தான் என்பதை, மே 23-ஆம் தேதி மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு உறுதி செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இவ்விஷயத்தில், பிரதமர் மோடி தன்னுடன் நேரடி விவாதம் நடத்தத் தயாரா? என்ற கேள்வியையும் ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தனக்கு வேண்டியவர்களுக்காக பிரதமர் அலுவலகம் செய்த தலையீட்டை, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியிட்டது. இதனால் மிரண்டுபோன மோடி அரசு, சீராய்வு மனு மீதான விசாரணையின்போது, ‘தி இந்து’ ஏட்டில் வெளியான ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது என்று வாதிட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக, மத்திய அரசின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் புறந்தள்ளி விட்டது. இதையடுத்து அன்றைதினம் (ஏப்ரல் 10) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்த நாட்டின் காவலாளி ஒரு திருடர் என்று நீதிமன்றமே கூறிவிட்டது” என்றார். “காவலாளியே திருடன் ஆனார்” என்ற ராகுலின் முழக்கத்தை காங்கிரசார் நாடு முழுவதும் கொண்டு சென்றனர். பாஜக-வினர் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். மோடி திருடன் என்று நீதிமன்றம் எந்த இடத்திலும் சொல்லாதபோது, அதை நீதிமன்றத்தின் தீர்ப்புபோல, ராகுல் கூறுவது நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகும் என்று பாஜக எம்.பி. மீனாட்சி லேகி குற்றம் சாட்டினார். ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு, ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி உரிய பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


அதனடிப்படையில், ராகுல் காந்தி திங்களன்று (ஏப்ரல் 22) தனது தரப்பு விளக்கத்தை, அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் “தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேகத்தில் ‘நீதிமன்றமே மோடியை திருடர் என்று சொல்லிவிட்டது’ என்றேன்; மற்றபடி நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை; எனினும் மோடி திருடர் என்று நீதிமன்றம் கூறியதாக சொன்னதற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். பிரதமர் மோடி கூட தனது பிரச்சாரத்தில், “ரபேல் விவகாரத்தில் தங்களுடைய அரசு எந்த விதமான தவறும் செய்யவில்லை, ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது” என்று பிரச்சாரம் செய்து வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். ராகுல் இவ்வாறு வருத்தம் தெரிவித்ததை, தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட பாஜக-வினர், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டதன் மூலம், அவர் பொய்யர் என்பது அம்பலமாகி விட்டதாக மற்றொரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடத் தொடங்கினர். ராகுல் காந்தி பின்வாங்கி விட்டாரா? என்ற கேள்விகளும் எழுந்தன. இதனை உணர்ந்த ராகுல் காந்தி, “மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக சொன்னதற்குத்தான் வருத்தம் தெரிவித்திருப்பதாகவும், மற்றபடி மோடி திருடர் என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அமேதியில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ராகுல் காந்தி, “மோடி நேர்மையானவராக இருந்தால் ரபேல் விவகாரம் குறித்து என்னுடன் 15 நிமிடம் விவாதிக்கத் தயாரா? அவர் சொல்லும் இடத்திலேயே விவாதிக்கலாம்” என்றதுடன், “மோடி திருடர்தான் என்பதை மே 23 அன்று மக்களின் நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு உறுதி செய்யும்” என்றும் கூறியுள்ளார்.


தனது டவிட்டர் பக்கத்திலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மே 23-ஆம் தேதி தாமரை ‘பிராண்டு’ காவலாளிதான் (பிரதமர் மோடி) திருடன் என்பதை மக்கள் நீதிமன்றம் முடிவு செய்யும்; நீதி நிலைநிறுத்தப்படும்; ஏழைகளின் பணத்தைத் திருடி, தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியவர் தண்டனையை சந்திப்பார்” என்று கூறியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துள்ளது. “ராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவமதிக்கு உரியதுதான்” என்று கூறியுள்ள இந்த அமர்வு, ஏப்ரல் 30-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.