tamilnadu

img

என்பிஆருக்கு 2015 ஆம் ஆண்டே அடிபோட்ட மோடி அரசு... ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய அறிக்கை மூலம் அம்பலம்

புதுதில்லி:
தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு (National Population Register - NPR) நாடுமுழுவதும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், இதனை ரிசர்வ் வங்கி மூலமாக, 2015-ஆம் ஆண்டே மோடி அரசு அமல்படுத்ததிட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, 2015-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வங்கிகளுக்கான கே.ஒய்.சி.(Know Your Customer - KYC) படிவத்தில்என்.பி.ஆர் அடையாள எண்ணையும் ஆதாரமாக சேர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளது.பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக் கான அடையாள அட்டை, பெயர், முகவரி உட்பட தேசிய மக்கள்தொகை பதிவாளர் அளித்த படிவத்தையும் கே.ஒய்.சி.க்கான ஆவணங்களாக எடுத்துக்கொள்ளலாம் எனதெரிவித்துள்ளது.

ஆனால், நிதியமைச்சகம் 2015-இல் விடுத்த அறிக்கையின்படி, 2018 ஏப்ரல் மாதத்தில்தான், ரிசர்வ் வங்கி கே.ஒய்.சி-யில்என்.பி.ஆரை சேர்த்துள்ளது. வங்கிக் கணக்குகளுக்கான கே.ஒய்.சி.விண்ணப்பிக்கும் போது, அதற்கு தற்போதுஎன்.பி.ஆர். ஆவணமும் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், அதனை கட்டாயம் வழங்க வேண்டும் என்று நிபந்தனை எதுவும்விதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி சமாளித்துள்ளது.ஆனால், ‘சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா’ சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ வேண்டும் என்றால் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகச் சமர்ப்பித்தாக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.