புதுதில்லி:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (CAA) எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதச்சார்பற்ற நாட்டில், மதத்தின் அடிப்படையில் குடியுரிமையைத் தீர்மானிப்பதாக சிஏஏ உள்ளது; குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற முயல்கிறது என்று அனைத்து தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்தான், குடியுரிமைச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு, 2018-ஆம் ஆண்டே, விசா வழங்குவதிலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான - மத அடிப்படையிலான ஒரு அரசாணையை மோடி அரசு பிறப்பித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) விதிகள்- 1950 மற்றும் வெளிநாட்டினர் சட்டம்- 1946 ஆகியவற்றில் திருத்தம் செய்து, 2018 அக்டோபர் 22-இல் மோடி அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.அதில், “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் மட்டுமே நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்” என்று கூறியுள்ளது. குடியுரிமைச் சட்டத்தைப் போலவே, இஸ்லாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ளது.1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு, ஒரு குடியிருப்பு அனுமதி அல்லது நீண்டகால விசா முக்கியத் தேவையாகும். ஆகவே, குடியுரிமை விஷயத்தில் இஸ்லாமியர்களை ஆரம்பத்திலேயே வடிகட்டிவிடும் ஏற்பாடுகளில் ஒன்றாக மேற்கண்ட அரசாணையை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.
அதுமட்டுமல்ல, விசா காலத்தைத் தாண்டி இந்தியாவில் தங்கியிருப்பவர்களுக்கான அபராதத் தொகையிலும் மோடி அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. பிறமதத்தவருக்கு 90 நாட்களுக்கு ரூ. 100 என்று அபராதம் விதித்துள்ள மோடி அரசு, முஸ்லிம்களுக்கு மட்டும், படுபயங்கரமான வகையில் ரூ. 21 ஆயிரத்து 300 ரூபாய் என்று அபராதம் நிர்ணயித்துள்ளது.குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள வழக்கறிஞர்கள், வழக்கிற்கு தேவையான ஆதாரங்களைத் திரட்டும்போது, 2018 அரசாணை அவர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. குடியுரிமை சட்டத்துக்கான முன்னோட்டமாக இது போன்று பல்வேறு சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டு மோடி அரசு அரசாணைகளைப் பிறப்பித்துள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் அடிப்படையில், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே, பாஜக தனது இந்து ராஷ்ட்டிரா கனவை செயல்படுத்தத் துவங்கி விட்டதையும், 2016-இல் கொண்டுவரப்பட்ட என்ஆர்சி, 2018-இல் பிறப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட், விசா தொடர்பான அரசாணை, 2019-இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகிய அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு சங்கிலிப் பிணைப்பான நடவடிக்கை என்பதையும் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வழக்கறிஞர்கள் தற்போது முடிவு செய்துள்ளனர்.2018 அரசாணை தொடர்பாக பேட்டி அளித்துள்ள, சமூக ஆர்வலர் பிரசென்ஜித் போஸ், “மத்திய பாஜக அரசின் அரசாணைகள், மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பின் 14 வது பிரிவின்படி அரசியலமைப்பிற்கு முரணானதாகவும் கருதப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“அகதிகள் மீது யாரும் பொறாமை அல்லது கோபத்தை உணரக்கூடாது. அப்படியிருக்கும்போது, வன்முறை மற்றும் அமைதியின்மை ஆகியவற்றின் தீவிர நிலைமைகளிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது, ஒரு அரசாங்கமே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது; இது ஒரு மனித உரிமைப் பிரச்சனை” என்றும் வழக்கறிஞர்கள் பலர் கொதித்து எழுந்துள்ளனர்.