புதுதில்லி:
இந்திய பங்குச் சந்தைகள், செவ்வாயன்று இரண்டாவது நாளாக கடும் அடி வாங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையான ‘சென்செக்ஸ்’, தேசியப் பங்குச் சந்தையான ‘நிப்டி’ ஆகிய இரண்டுமே கடும்சரிவைச் சந்தித்துள்ளன.வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று, மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 262 புள்ளிகள் சரிந்து 0.70 சதவிகிதம் இறக்கத்துடன் 37 ஆயிரத்து 123 புள்ளிகளில் நிலைத்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 0.65 சதவிகிதம் சறுக்கலுடன் 11003.50 புள்ளிகளில் நிலைகொண்டது.
தேசிய பங்குச்சந்தையில் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.5 சதவிகிதமும் சிறு நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.1 சதவிகிதமும் குறைந்தன சவூதி அரேபியாவில் நடைபெற்ற எண்ணெய் ஆலை தாக்குதலும், கச்சா எண்ணெய் விலை உயர்வுமே, பங்குச் சந்தை சரிவுக்குக் காரணம் என்று கூறப்பட்டது.இந்நிலையில், வர்த்தக வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையன்றும் இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் அடிவாங்கியுள்ளன. திங்களன்று 37 ஆயிரத்து 123 புள்ளிகளில் நிலை கொண்டிருந்த மும்பை பங்குச் சந்தை, செவ்வாயன்று 642 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 481 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. இதேபோல 11 ஆயிரத்து 3 புள்ளிகளில் நிலை கொண்டிருந்த தேசியப் பங்குச் சந்தை, 186 புள்ளிகள் சரிந்து, செவ்வாயன்று 10 ஆயிரத்து 817 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.