புதுதில்லி:
அரசுப் பள்ளிகளில் படித்தவர் களுக்கு மட்டுமே அரசாங்க வேலை வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மாதோ தெரிவித்துள்ளார்.“அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்கப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு” என்றும், “மக்கள் தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு முயல்வதில் நியாயம் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், “பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ள மாதோ, “பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்” என்றும் கூறியுள்ளார்.அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு இதர பணிகள் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.