அகர்தலா, ஏப். 18 - திரிபுரா மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், உடலில் தலை இருக்காது என்று பொதுமக்களுக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலை சுவரொட்டியாகவே அடித்து ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒட்டியிருக்கும் அவர்கள், வெட்டப்பட்ட கோழியின் தலையையும் அருகில் கட்டித் தொடங்க விட்டுள்ளனர்.திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, வரலாறு காணாத அராஜகத்தை கட்டவிழ்த்து விட்ட ஆளும் பாஜக-வினர், 464 வாக்குப்பதிவு மையங்களை முழுமையாக கைப்பற்றி, முறைகேடுகளை அரங்கேற்றினர். இதனால், திரிபுரா மேற்குத் தொகுதியில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என்றும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை ஏற்காமல் உள்ளது.
இதனிடையே, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது, அப்படி வாக்களித்தால் அவர்களின் உடலில் தலை இருக்காது என்று பாஜக-வினர் கொலை மிரட்டல் விடுக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கிழக்கு திரிபுராவின் கொவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜம்புரா நகரத்தில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது’ என்று வீட்டு வாசல்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளின் அருகில் வெட்டப்பட்ட கோழியின் தலையை இரத்தத்துடன் கட்டித் தொங்கவிட்டு, அதன் கீழ் “நீங்கள் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்களிக்கச் சென்றால், உங்களுக்கும் இதே நிலைதான்” என்று எழுதி வைத்துள்ளனர்.இது திரிபுரா பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பாஜக-வினரின் இந்த அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக-வினர், தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதன்காரணமாகவே இவ்வாறு அராஜகம் மூலம் வாக்காளர்களை அச்சுறுத்துவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொவாய் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிர்மல் பிஸ்வாஸ் கூறியுள்ளார். இந்த அச்சுறுத்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. திரிபுராவில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் நியாயமான முறையில், தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியும் சிறப்பு காவல் கண்காணிப்பாளரும் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தனர். அதனடிப்படையில், திரிபுரா மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. திரிபுரா மேற்குத் தொகுதியில் சங்கர் பிரசாத் தத்தாவும், திரிபுரா கிழக்குத் தொகுதியில் ஜிதேந்திர சவுத்ரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.