புதுதில்லி:
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளின் பின்னணியில் இவற்றுடன் இணைக்கப்பட்ட விவிபேட் எந்திரங்களில் உள்ள சீட்டுகளை எப்படி எண்ண வேண்டும் என்பது குறித்து 22 எதிர்க் கட்சிகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மனு அளித்துள்ளன.
அந்த மனுவின் சாராம்சம் வருமாறு:நாட்டில் 70 சதவீத வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 அரசியல் கட்சிகள் இணைந்து 2019 ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையரை அணுகி, மின்னணு வாக்கு எந்திரங்களுடன் இணைக்கப்படும் விவிபேட் எந்திரங்களை அதிகரித்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தன.
பின்னர், 2019 ஏப்ரல் 8 அன்று உச்சநீதிமன்றம் விவிபேட் எந்திரங்களுடன் உள்ள துண்டுச்சீட்டுகளை தோராயமானமுறையில் (random) எடுத்து சரிபார்த்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தது.எனினும் பின்னர் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டிருந்த வழிகாட்டும் நெறிமுறைகள், உச்சநீதிமன்றத்தின் கட்டளையில் கூறப்பட்டிருந்த நடைமுறைக்கு மாறாக, பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்டது.
வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் தொடர்பாக மின்னணு வாக்கு எந்திரங்களில் காணப்படும் எண்ணுக்கும், விவிபேட் துண்டுச்சீட்டுகளில் காணப்படும் எண்ணுக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டால், துண்டுச்சீட்டில் காணப்பட்ட எண்ணிக்கையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றுதேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. ஆனால் இவ்வாறு வேறுபாடு ஏற்படுமாயின் அது எப்படி நேர்ந்தது என்பது குறித்துப் புலனாய்வு செய்திட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. இவ்வாறு விவிபேட் எந்திரங்கள் மூலம்துண்டுச்சீட்டுகள் அளிக்கும்பணி மொத்தம் உள்ள வாக்குச் சாவடிகளில் 2 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 98 சதவீத வாக்குச்சாவடிகளின் கதியைப் பொறுத்தவரை அவை மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள கணக்கீட்டை மட்டுமே நம்பியாக வேண்டும். மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் ஏற்படுத்த முடியும் என்பதைத் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது.
எனினும் இந்தப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எப்படிஎன்பது குறித்து ஒரு விவாதத்தைநடத்திட தேர்தல் ஆணையம் மிகவும் வசதியாக தவிர்த்துவிட்டது. விவாதமே நடத்த தேர்தல் ஆணையம் முன்வராத நிலையில் இப்பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காண முடியும்? மேலும் விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டில் காணப்படும் எண்ணிக்கைக்கும், மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் காணப்படுமானால், சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலரும், தேர்தல் பார்வையாளரும் மாநிலத் தேர்தல் அலுவலருக்கு இதுகுறித்து தெரிவித்திட வேண்டும் என்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையரால் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை வைத்துக்கொண்டு, மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் என்ன செய்வார் என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.
எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டுகள் மற்றும்மின்னணு வாக்கு எந்திரங்கள் தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையைத் தெளிவாகத் தெரிவித்திட வேண்டும்.22 கட்சிகளின் சார்பில் நாங்கள்தலைமைத் தேர்தல் ஆணையரைக்கேட்டுக்கொள்வது என்னவெனில்,விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட வேண்டும் என்பதாகும். விவிபேட் எந்திரத் துண்டுச்சீட்டுகளுக்கும், மின்னணு வாக்கு எந்திரங்களுக்கும் இடையே எண்ணிக்கைதொடர்பாக வித்தியாசம் காணப்படுமானால் அத்தொகுதியில் உள்ள விவிபேட் எந்திரத் துண்டுச்சீட்டுகளை 100 சதவீதமும் எண்ணிவிட வேண்டும்.
இவ்வாறு 22 கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனுச் செய்துள்ளனர்.(ந.நி.)